| ADDED : பிப் 04, 2024 02:21 AM
திருப்பூர்:குண்டடம் அருகே போடாத சாலைக்கு, போலி ஆவணங்களை காட்டி, 42.36 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்தது தொடர்பாக, நடவடிக்கை எடுக்க மாவட்ட குறைதீர்ப்பாளர் கலெக்டருக்குபரிந்துரை செய்துள்ளார்.திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியம், சிறுகிணர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டாங்காடு கிராமத்தில் நொச்சிபாளையம் குண்டடம் ரோடு முதல் கள்ளிமேட்டுப்பாளையம் ரோடு வரை என, 2 கி.மீ.,க்கு மெட்டல் ரோடு போட மக்கள் வலியுறுத்தி வந்தனர். இங்கு ரோடு போட கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில், இந்த இடத்தில் ரோடு போடப்பட்டதாக 42.36 லட்சம் ரூபாய்க்கு போலி ஆவணங்கள் மூலம் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட திருப்பூர் மாவட்ட குறைதீர்ப்பாளர் பிரேமலதா சமீபத்தில் சிறுகிணர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். நிர்வாக அனுமதி பெறப்பட்ட இடத்தில் ரோடு அமைக்கப்பட்டதாக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு நிதி முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது.இம்முறைகேடு தொடர்பாக, சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர், போலி ஆவணங்களுக்கு நிதி விடுவித்த வட்டார வளர்ச்சி அலுவலர் (ரோடு அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு முடியும் வரை பணியாற்றியவர்கள்) மீது நடவடிக்கை எடுத்து, முறைகேடு செய்யப்பட்ட நிதியை திரும்ப பெற தேவையான நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து கலெக்டர் கிறிஸ்துராஜூக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.