உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொடர் திருட்டு சம்பவங்கள்; பொதுமக்கள் பீதி

தொடர் திருட்டு சம்பவங்கள்; பொதுமக்கள் பீதி

அனுப்பர்பாளையம்;திருமுருகன்பூண்டி, அனுப்பர்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.* திருமுருகன்பூண்டி, தேவராயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வித்யாசாகர், 47; பனியன் நிறுவன மேலாளர். இவரது வீட்டின் பின் பக்க கதவை உடைத்து 50 சவரன் நகைகள் திருடப்பட்டன.* நெருப்பெரிச்சல் ஜி.என்., கார்டன் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி, 48; பனியன் நிறுவன உரிமையாளர். இவரது வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் தங்க நகைகள்; 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் திருடப்பட்டன.* பொம்மநாயக்கன் பாளையம் பாலன் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 42; பனியன் தொழிலாளி. இவரது வீட்டு பூட்டை உடைத்து, இரண்டரை சவரன் தங்க நகைகள் திருடப்பட்டன. அதே வீதியில் அடுத்தடுத்து இரு வீடுகளில் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.* வாவிபாளையம் ஜெ.கே., மாடர்ன் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் தயானந்தன், 29; தனியார் பள்ளி ஆசிரியர். இவரது வீட்டின் பூட்டை உடைத்து, 30 சவரன் நகைகள் திருடப்பட்டன.* திருப்பூர் கொங்கு மெயின் ரோடு டி.எம்.எஸ்., நகரை சேர்ந்தவர் பாலமுருகன், 47; சிலிண்டர் சப்ளை ஊழியர். பொங்குபாளையம் காஸ் குடோனில் இருந்து, 3 லட்சம் ரூபாயை எடுத்து கொண்டு பைக்கில் பிச்சம் பாளையத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்றார். பாண்டியன் நகர் அருகே சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த மூன்று பேர் கும்பல் 3 லட்சம் ரூபாயை பறித்து சென்றனர்.இச்சம்பவங்கள் அனைத்தும் கடந்த 20 நாட்களுக்குள் அடுத்தடுத்து நடந்த சம்பவமாகும்.இதில், மூன்று லட்சம் ரூபாய் வழிப்பறி சம்பவத்தில் மட்டும் போலீசார் மூன்று பேரை கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மற்ற வழக்குகளில் குற்றவாளிகள் இன்னும் சிக்கவில்லை. குற்றவாளிகளைக் கண்டறிய இயலாமல் போலீசார் திணறி வருகின்றனர்.தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.........

போலீஸ் பற்றாக்குறை

திருமுருகன் பூண்டி, அனுப்பர்பாளையம் பரந்து விரிந்த பகுதி; அதிக கிராம பகுதிகள் உள்ளன. விரிவாக்க பகுதிக்கேற்ப போலீசாரை அதிகப்படுத்த வேண்டும்.வாகன சோதனைச்சாவடி முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை. போதிய ரோந்து பணியும் இல்லை. மேலும் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மது பார்கள் இயங்குவதும் குற்றங்கள் அதிகரிக்க முக்கிய காரணம். கூடுதல் போலீசாரை நியமித்து, ரோந்து பணியை தீவிர படுத்தி குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் அச்சத்தை போக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ