உடுமலை;பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்துக்காக, உடுமலை வழியாக, பயணியர் ரயில்களை கூடுதலாக இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாலக்காடு - திண்டுக்கல் அகல ரயில்பாதை பணிகள் நிறைவு பெற்று, கடந்த 2015ல், இருந்து ரயில் போக்குவரத்து உள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்துக்காக, கூடுதலாக பயணியர் ரயில்கள் இயக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பயணியர் கூறியதாவது: பொங்கல் பண்டிகையையொட்டி, முன்பு, ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு, அதிக வரவேற்பு கிடைத்தது. இந்த ரயிலை பண்டிகை சீசனில், இயக்க வேண்டும்.பொங்கலை தொடர்ந்து வரும், தைப்பூசம், பொள்ளாச்சி, உடுமலை பகுதியில், சிறப்பாக கொண்டாடப்படுகிறது.விழாவையொட்டி, பழநிக்கு பாதயாத்திரையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். இவ்வாறு, செல்பவர்கள், சொந்த ஊருக்கு பஸ்களில் திரும்புகின்றனர்.அப்போது, உடுமலை, பொள்ளாச்சி மற்றும் கேரளா பாலக்காடு உட்பட பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள், போதிய பஸ் வசதி இல்லாமல், பாதிக்கப்படுகின்றனர். சிறப்பு பஸ்கள், மடத்துக்குளம், உடுமலை, கோமங்கலம் போன்ற ஸ்டாப்களில் நிற்பதில்லை.தைப்பூசத்துக்காக கோவை - பழநி சிறப்பு ரயில் இயக்கினால், பயனுள்ளதாக இருக்கும். மதுரை கோட்ட நிர்வாகிகள் இது குறித்து முன்னதாகவே ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழநி - பாலக்காடு சிறப்பு ரயில் இயக்கினால், கேரளாவிலிருந்து வரும் பக்தர்களும் பயன்பெறுவார்கள்.இவ்வாறு, தெரிவித்தனர்.