செ ன்னை, நேரு விளையாட்டு அரங்கில், இந்திய தடகள கூட்டமைப்பு சார்பில், 23வது ஆசிய மூத்தோர் தடகள போட்டி நவ. 5 முதல் 9 வரை நான்கு நாட்கள் நடந்தது. இதில், 27 நாடுகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உட்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட மூத்தோர் பங்கேற்றனர். மூத்தோர், 75 வயது பிரிவு, ஈட்டி எறிதலில் முதலிடம், வட்டு எறிதலில் இரண்டாமிடம், குண்டு எறிதலில் மூன்றாமிடம் பெற்று திருப்பூர், மண்ணரையை சேர்ந்த வீராங்கனை, கண்ணம்மாள், 75 அசத்தியுள்ளார். பெண்கள் 40 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் ரெஜனி பிரதீபன் கோலுான்றி தாண்டுதலில் இரண்டாமிடமும், சந்தனமாரி 5 கி.மீ. நடைப்போட்டியில் இரண்டாமிடமும் பெற்றனர். சாதனை படைத்த கண்ணம்மாள் நம்மிடம் பகிர்ந்தவை: எனக்கு குரு என் உடற்கல்வி ஆசிரியர். எனது உற்சாகத்தை பார்த்து அவர், எனக்கு பயிற்சி அளித்தார். கல்லுாரி கடந்தும் எனக்கு விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகமானது. விளையாட்டின் மீதான ஆர்வத்தை பாதியில் நிறுத்தி விடக்கூடாது. இலக்கை தொடும் வரை உற்சாகம் ஓயாமல் இருக்க வேண்டும்; விளையாட்டுக்கு வயது ஒரு தடையல்ல. உடற்கல்வி ஆசிரியராக, 33 ஆண்டுகள் பழனியம்மாள், சின்னச்சாமி அம்மாள் பள்ளியில் பணிபுரிந்து, ஏராளமான வீரர், வீராங் கனைகளை மாநில போட்டிக்கு அழைத்துச் சென்ற அனுபவம் இன்றும் எனக்கு கைகொடுக்கிறது. உடலை 'பிட்' ஆக வைக்க உடற்பயிற்சி பெண்களுக்கு முக்கியம். தினமும் காலை, மாலை கட்டாய வாக்கிங், உடற்பயிற்சி செய்வேன். விளையாட்டு என்னை வாழ வைத்தது. எனக்கு படிப்பு கொடுத்து, வாழ்க்கையையும், வேலையையும் கொடுத்ததால், இன்று வரை எங்கு போட்டி நடப்பது குறித்து தகவல் தெரிந்தாலும், உடனே ஆர்வமாக கிளம்பிவிடுவேன். குடும்பத்தினர் ஒத்துழைப்பு, ஊக்கம் இல்லாமல் என் வெற்றி சாத்தியமில்லை. இவ்வாறு, கண்ணம்மாள் கூறினார்.