திருப்பூர்: ''குப்பை அள்ளுவதில், தற்போது மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது,'' என, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பொள்ளாச்சிஜெயராமன் தெரிவித்துள்ளார். திருப்பூரில், நேற்று குப்பை பிரச்னைக்காக போராடி, கைதான கட்சியினர் மற்றும் கவுன்சிலர்களை சந்தித்து, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், பேசினார். அதன்பின், நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவின் 'டாலர் சிட்டி' என்று பெயர் பெற்ற திருப்பூர் மாநகரம், உலகம் முழுவதும் அறிந்த வணிக நகரம். கடந்த மூன்றாண்டுகளாக, குப்பை குவிந்து, கொடூரமான நகரமாக மாறியுள்ளது. 'டாலர் சிட்டி' என்ற பெயர் மறைந்து குப்பை நகர் என்று மாறிவிட்டது. நகருக்குள் சென்று வந்தாலே நோய் தொற்று உருவாகுமோ என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி கமிஷனரிடம் இதுதொடர்பாக பலமுறை வலியுறுத்தியும், சரியான நடவடிக்கை இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் முறையான திடக்கழிவு மேலாண்மை பணி நடந்தது. குப்பை அள்ளுவதில், தற்போது மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பலமுறை வலியுறுத்தியும், காதுகேளாத மனிதர்களை போல் மாநகராட்சியும், மேயரும் இருக்கின்றனர். இதற்கு மேலும் பொறுமையாக இருக்கமாட்டோம். இரண்டு நாட்களுக்குள் குப்பைகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தாவிட்டால், நகரை துாய்மைபடுத்தாவிட்டால், திருப்பூர் நகரம் ஸ்தம்பிக்கும் அளவுக்கு மிகப்பெரிய போராட்டம் நடக்கும். குப்பை குவித்த இடங்களில், ஈ, கொசு, எலி, பெருச்சாளி ஆகியன வாழ்கின்றன. திருப்பூர் மக்கள், மாநகராட்சி நிர்வாகத்தை நினைத்து வேதனைப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு வார்டிலும், 200 டன்னுக்கும் அதிகமான குப்பை குவிந்துள்ளது. குப்பை பிரச்னைக்காக போராடிய கவுன்சிலர்களை கைது செய்துள்ளது கண்டித்தக்கது; 60 வார்டுகளிலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது; குப்பைக்கு வரி மட்டும் போடுகின்றனர் மக்கள் பிரச்னைகளை கண்டுகொள்வதில்லை. குப்பை அள்ளுமாறு கூறினால், வழக்கு தொடர்ந்து, கவுன்சிலர்களை கைது செய்கின்றனர். குப்பை பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், திருப்பூரில் மாபெரும் போராட்டம் நடக்கும். வியாபாரிகள், தொழில்துறையினரை திரட்டி, போராட்டம் நடத்துவோம். இவ்வாறு, அவர் கூறினார்.