உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒச்சாம்பாளையம் அரசுப்பள்ளியில் சமூக விரோதிகள் அட்டகாசம்

ஒச்சாம்பாளையம் அரசுப்பள்ளியில் சமூக விரோதிகள் அட்டகாசம்

சேவூர்; சேவூர் ஊராட்சி எல்லையில் உள்ள ஒச்சாம் பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சமூக விரோதிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதுடன், பள்ளிக்கு சொந்தமான சொத்துகளை சேதப்படுத்தியும் வருகின்றனர்.அப்பகுதி பொதுமக்கள் சிலர் கூறியதாவது:மாலை மற்றும் இரவு நேரங்களில் பள்ளிக்குள் சிலர் சுவர் ஏறி குதிக்கின்றனர். கழிப்பறையில், குழாய் இணைப்பு மற்றும் 'வாஷ் பேசின்' ஆகியவற்றை, உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.பள்ளியின் முகப்பில் உள்ள பெயர் பலகை முதற்கொண்டு, குடிநீர் தொட்டி, குழாய் உள்ளிட்ட பொருட்களை திருடியும் செல்கின்றனர். சேமடைந்த பொருட்களை புதிதாக வாங்கி பொருத்தினால் கூட மீண்டும், மீண்டும் சேதப்படுத்துவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.சமீபத்தில் கட்டப்பட்ட தடுப்புச்சுவரையும் இடித்து, தேசப்படுத்தியுள்ளனர். பள்ளி வளாகத்துக்குள் அமர்ந்து மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.இதை தட்டிக்கேட்கும் உள்ளூர்வாசிகளை மிரட்டுகின்றனர்; இதனால், அத்து மீறும் இளைஞர்களை தடுக்க முடியாத நிலையில் ஊர் மக்கள் உள்ளனர்.பள்ளி நிர்வாகத்தின் சார்பில், இதுகுறித்து போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எதுவும் இல்லை.அரசு பள்ளிகளை மேம்படுத்தி மாணவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த அரசு முனைப்புக் காட்டி வரும் நிலையில், ஒதுக்குப்புறமாக உள்ள கிராமப்புற மக்களின் கல்வியை நோக்கமாக கொண்டு செயல்படும் இப்பள்ளியில், சேதங்களை சரி செய்து தருவதுடன், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து, அத்துமீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை