உடுமலை;இயற்கை வேளாண் முறையில், வேம்பு சார்ந்த பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதால், அவற்றின் தேவை அதிகரித்துள்ளது; வேப்ப மரங்கள், நிழல் அளிப்பதுடன், வேப்பங்காய் வாயிலாக, தற்போதைய சீசனில், தொழிலாளர்களுக்கு வருவாயும் கிடைத்து வருகிறது.உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. பல்வேறு காரணங்களால், பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள், நோய்த்தாக்குதலுக்கு ஆளாகி காய்ப்புத்திறன் குறைந்தது. குறிப்பாக, வெள்ளை ஈ மற்றும் வாடல் நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.இத்தகைய நோய்களை கட்டுப்படுத்த, இயற்கை வேளாண் முறையை பின்பற்றவும், குறிப்பாக, வேப்பம்புண்ணாக்கு உள்ளிட்ட வேம்பு சார்ந்த பொருட்களை பயன்படுத்த, பரிந்துரைக்கப்படுகிறது.எனவே, இம்முறையை பெரும்பாலான விவசாயிகள் பின்பற்ற துவங்கியுள்ளனர். மேலும், மண் வளத்தை பாதுகாக்கும், இயற்கை வேளாண் முறையில், வேப்ப எண்ணெய், புண்ணாக்கு, அதிலிருந்து தயாரிக்கப்படும் பூச்சி விரட்டி முக்கிய பங்கு வகிக்கிறது.இயற்கை உரங்கள் தயாரிப்பிலும், வேப்ப மரங்களிலிருந்து பெறப்படும், வேப்பங்காய் தவிர்க்க முடியாத அங்கமாக உள்ளது.தென்மேற்கு பருவமழைக்குப்பிறகு, தென்னை மரங்களில், உரமிடுவதற்காக வேப்பம்புண்ணாக்கின் தேவை பல மடங்கு உயர்ந்துள்ளது. எனவே அதை சார்ந்து வேப்பமரங்களில், இருந்து பெறப்படும் வேப்பங்காய்க்கும், தேவை அதிகரித்துள்ளது.பலரும், சிறு, குறு தொழில் அடிப்படையில், இது போன்ற வேளாண் இடுபொருட்களை உற்பத்தி செய்து, சந்தைப்படுத்துகின்றனர். வறட்சியான வெப்ப நிலை நிலவும் போது, வேப்பமரங்களில், பூ விட்டு, காய் பிடிக்கும்.மரங்களிலிருந்து இயற்கையாக பழுத்து விழும் பழங்களை சேகரித்து, குறைந்தளவு வேப்ப எண்ணெய் தயாரிப்பது முன்பு கிராமங்களில், வழக்கமானதாக இருந்தது. இந்த நடைமுறை படிப்படியாக குறைந்து விட்டது.தற்போது, இயற்கை வேளாண் முறை சார்ந்த பொருட்கள் தயாரிப்புக்கு, அதிகளவு வேப்பங்காய்கள் தேவை உள்ளது.எனவே, கிராமங்களில் உள்ள விவசாய தொழிலாளர்கள் மற்றும் முதியவர்கள் வேப்ப மரங்களிலிருந்து கிடைக்கும் பழங்கள் மற்றும் அதன் தோல் ஆகியவற்றை சேகரிக்கின்றனர்.இதை, கிராமங்களுக்கு நேரடியாகச்சென்று, சிறு வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். திருமூர்த்திமலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் கிராம மக்களும் வேப்பங்காயை சேகரித்து, நகருக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.வேப்பம் பழங்களிலிருந்து தனியாக பிரித்தெடுக்கப்படும் கொட்டைக்கு, தற்போது, கிலோவுக்கு, 80 முதல் 83 ரூபாய் வரை விலை கிடைக்கிறது.உடுமலைக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து வேப்பங்காய் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
வேளாண்துறையினர் கூறியதாவது: இயற்கை வேளாண் முறைகளை பின்பற்ற, அனைத்து வட்டார விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக, வேம்பு சார்ந்த அனைத்து பொருட்களும், இயற்கை வேளாண் முறைக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தமிழக அரசும், சிறப்பு திட்டத்தின் கீழ், வேப்பமரங்கள் வளர்ப்பை ஊக்குவித்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு தேவையான வேப்ப மரக்கன்றுகள் உற்பத்தி செய்து மானியத்தில் வழங்கி வருகிறோம்.இவ்வாறு, தெரிவித்தனர்.'கிராமங்களில் நிழலுக்காக வளர்க்கப்படும் வேப்ப மரங்கள் தற்போது, பல்வேறு தரப்பினருக்கும் வருவாய் தருபவையாக மாறியுள்ளது,' என இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.'விவசாய ஆர்வலர்கள் குழுக்கள் வாயிலாக, வேப்ப எண்ணெய் மற்றும் இதர இடுபொருட்கள் தயாரிக்க, அரசு உதவினால் அனைத்து தரப்பினருக்கும் உதவியாக இருக்கும்,' என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.