| ADDED : நவ 22, 2025 05:58 AM
திருப்பூர்: திருப்பூரில் பள்ளி மாணவர்களிடம் மறுசுழற்சிக்காக பிளாஸ்டிக் குப்பைகள் பெறப்பட்டு, அதற்கு பதிலாக கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. திருப்பூரில் உள்ள யுனிவர்சல் மெட்ரிக் பள்ளியில், நேற்று முன்தினம், துப்புரவாளன் அமைப்பு சார்பில், 'இன்டர் ஸ்கூல் ரீசைக்ளிங் சார்பியன்' என்னும் பள்ளிகளுக்கிடையே குப்பை சேகரிப்பு நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களிடமிருந்து மறுசுழற்சிக்கான பழைய நோட்டு, புத்தகம், பிளாஸ்டிக் உள்ளிட்ட 4 ஆயிரத்து 500 கிலோ எடையுள்ள குப்பைகள் பெறப்பட்டு அதற்குப் பதிலாக மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. 782 குழந்தைகள் பங்கேற்று குப்பைகளை வழங்கினர். இதுகுறித்து 'துப்புரவாளன்' அமைப்பின் தலைவர் பத்மநாபன் கூறியதாவது: பள்ளிகளில் குப்பை சேகரித்து எங்கள் நிறுவனத்தில் தரம் பிரித்து, அட்டை, பேப்பர் கழிவுகளை காரமடையில் உள்ள ஐ.டி.சி.யின் மறுசுழற்சி நிலையத்துக்கும் பாட்டில், பிளாஸ்டிக் போன்ற பிற கழிவுகள் மறுசுழற்சிக்கும் அனுப்பப்படுகிறது. நாங்கள் திருப்பூரில் உள்ள பள்ளிகளை அணுகி குப்பைகளை சேகரிக்கிறோம். மாணவர்களை உக்குவிக்க குப்பைகள் கொண்டு வருவோர்க்கு, நோட்டு, பென்சில், பேனா வழங்குகிறோம். மாணவர்களில் ஐந்து கிலோவுக்கு மேல் குப்பை கொடுப்போர்க்கு சான்றிதழ், அதிகப்படியான குப்பை கொடுப்போர்க்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் அழகிய சணல் பை வழங்கப்படும். ஆண்டு இறுதியில் அதிகளவு குப்பை கொடுத்த பள்ளிக்கு விருது வழங்கப்படும். ஒரே கல்லில் 3 மாங்காய் குழந்தைகளிடம் பெறப்படுவதில் 90 சதவீதம் நோட்டு, புத்தகமே. பல வீடுகளில் பழைய புத்தகம், அட்டைகள் வெறுமனே கிடக்கின்றன. இவ்வாறான செயல்பாடுகள் வாயிலாக மறுசுழற்சிக்கு பேப்பர் கிடைப்பதால் நிறுவனங்கள், பேப்பர் தயாரிக்க அதிக மரம் வெட்டுவது தடுக்கப்படும். குப்பை நீங்குவதால் நகரமும் துாய்மையாகும். குழந்தைகளிடம் கழிவிலும் பயன் உள்ளதை புரிய வைத்து, மறுசுழற்சி செய்யும் எண்ணத்தை விதைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.