உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொதுத்தேர்வை எதிர்கொள்ள ஆசிரியர்கள் விழிப்புணர்வு

பொதுத்தேர்வை எதிர்கொள்ள ஆசிரியர்கள் விழிப்புணர்வு

உடுமலை;மாணவர்கள் விடுப்பில்லாமல் பொதுத்தேர்வு எழுதுவதற்கு, பெற்றோருக்கு பள்ளி நிர்வாகத்தினர் அறிவுறுத்தி வருகின்றனர்.பொதுவாக, மார்ச், ஏப்., மாதங்களில் பள்ளிகளில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு, இம்மாதம் 25ம் தேதி வரை நடக்கிறது.தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் வகையில், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தீவிர பயிற்சிகள் அளித்தனர். மாணவ, மாணவியரும் தேர்வுகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.மேலும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2தேர்வுகளில், மாணவர்களை பங்கேற்கச்செய்வதற்கு, ஏற்கனவே பள்ளி மேலாண்மைக்குழு கூட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தற்போது பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு, வரும் 26ம் தேதி துவங்கி, ஏப்., 8ம் தேதி வரை நடக்கிறது.மேல்நிலையை விடவும், உயர்நிலை வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு அதிகமான அச்சத்தை ஏற்படுத்துகிறது. அவர்களின் தேர்வு பயத்தை போக்குவது அவசியமாகியுள்ளது.இதனால், மாணவர்களை மனதளவிலும் தயார்படுத்துவதும், ஆசிரியர்களுக்கு சவாலாக உள்ளது.தேர்வுக்கு குறுகிய நாட்கள் மட்டுமே இருப்பதால், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு, ஆசிரியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:மாணவர்கள் நன்றாக பயிற்சிகளில் தேர்வு எழுதுகின்றனர். ஆனாலும் தேர்வு பயம் பலருக்கும் போவதில்லை. இதன் விளைவாக, தேர்வுக்கு வராமல் விடுகின்றனர்.நன்றாக படித்தாலும், படிக்கவில்லை என்றாலும், முதலில் தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டுமென மாணவர்களுக்கு, தொடர்ந்து கூறி வருகிறோம்.மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டும், நேரடியாக சந்தித்தும் தேர்வு நேரத்தில் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாமெனவும், ஊக்குவிக்க வேண்டும், உடல்நலத்தில் கவனம் தேவை என, ஆலோசனை வழங்குகிறோம்.தேர்வு நெருங்குவதால், மாணவர்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்துவதும் அவசியமாக உள்ளது. மாணவர்களும் அச்சமின்றி, தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுத வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்