| ADDED : ஜூலை 19, 2024 09:20 PM
பல்லடம்;சுல்தான்பேட்டை ஒன்றியம், நல்லுார்பாளையம் கிராமத்தில், பழமை வாய்ந்த அழகு நாச்சியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் அருள்பாலிக்கும் அம்மனுக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில், ஆங்கிலேயர் வழங்கிய புடவையில் அம்மன் அருள் பாலிப்பது வழக்கம். இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: ஆங்கிலேயர் காலத்தில், நல்லுார்பாளையம் வழியாக சென்ற ஆங்கிலேய படைகள், இங்குள்ள பெண்கள் சிலரிடம் தவறாக நடக்க முயற்சித்தனர். தப்பித்த பெண்கள், அழகு நாச்சியம்மன் கோவிலில் தஞ்சம் அடைந்தனர். பெண்களை விரட்டி வந்த ஆங்கிலேய படை வீரர்களுக்கு, பார்வை கோளாறு ஏற்பட்டது. தவறை உணர்ந்த அவர்களிடம், அம்மனை வேண்டிக் கொண்டால், நிச்சயம் சரியாகும் என, கிராம மக்கள் தெரிவித்ததை தொடர்ந்து, கண்பார்வை சரியானது. பெண்கள் இங்கு தஞ்சம் அடைந்ததால், இந்த அம்மனுக்கு அடைக்கலம் காத்த அம்மன் என்ற பெயரும் உள்ளது. கண்பார்வை திரும்பப் பெற்ற ஆங்கிலேயர்கள், அம்மனின் சக்தியை உணர்ந்து, புடவையை உடுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர். இது நடந்தது ஒரு ஆடி மாத வெள்ளிக்கிழமை என்பதால், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில், அம்மனுக்கு ஆங்கிலேயர் வழங்கிய புடவை உடுத்தப்பட்டு அலங்கரிக்கப்படும். ஆடி மாதம் முடிந்ததும், மீண்டும் புடவை பத்திரமாக பாதுகாக்கப்படும். பல நூறு ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். ------------------சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அழகு நாச்சியம்மன்.