திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் உத்தரவின்படி, இரு நாள் பறவைகள் கணக்கெடுப்பு, நேற்று துவங்கியது. திருப்பூர் வனச்சரத்துக்கு உட்பட்ட, நஞ்சராயன் பறவைகள் சரணாலயம், செம்மாண்டம்பாளையம் ஏரி, மாணிக்காபுரம் ஏரி, பள்ளபாளையம் ஏரி, சாமளாபுரம் ஏரி, அவிநாசி தாமரைக்குளம், சங்கமாங்குளம், சேவூர் குளம், சின்னாண்டிபாளையம் ஏரியில் பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் ரேஞ்சர் நித்யா தலைமையில் பாரஸ்டர்கள், வனக்காப்பாளர்கள், பிற வனப்பணியாளர்கள், திருப்பூர் இயற்கை கழகம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்பினர் இப்பணியில் ஈடுபட்டனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், ''பறவை, விலங்கினங்களுக்கான முக்கியத்துவம் என்பது, மலை மாவட்டங்கள் மற்றும் வனங்கள் உள்ள பகுதிக்கு மட்டுமே உரித்தானது என்ற, பொதுவான பார்வை, தொழில் நகரமான திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு இடத்துக்கும் பறவைகள் முக்கியம். மனிதர்களால் மரங்களை நட்டு வளர்க்க முடியுமே தவிர, அதில் மகரந்த சேர்க்கை செய்ய முடியாது; அது, பறவைகளால் மட்டுமே சாத்தியம். செடி, கொடி, தாவர இனங்களின் வளர்ச்சிக்கும், வளமைக்கும் இந்த மகரந்த சேர்க்கை தான் முக்கிய காரணம். பயிர்களை அழித்து நாசம் செய்யும் பூச்சிகளை, பறவைகள் தங்களுக்கு இரையாக்கிக் கொள்கின்றன. பலவகை விதைகளை உண்டு, அவை வெளியேற்றும் எச்சம் விழும் இடங்களில் தாவரம், செடி, கொடிகள் முளைத்து வளர்கின்றன; வறண்ட நிலங்களிலும், வளமையை சேர்க்கும் ஆற்றல் பறவைகளின் எச்சத்துக்கு உண்டு''என்றனர்.