திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், 263 வருவாய்த்துறை ஊழியர்கள், நேற்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில், பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பணி புறக்கணிப்பு போராட்டம் நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, வருவாய்த்துறை ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் மதன்குமார் தலைமை வகித்தார்.கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட தலைவர் தங்கவேல் தலைமையில் போராட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம், திருப்பூர் சப் கலெக்டர் அலுவலகம், தாராபுரம், உடுமலை ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, உடுமலை, ஊத்துக்குளி, காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம் தாலுகா அலுவலகங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை பணிபுரியும் 263 ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து, அந்தந்த அலுவலகங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வழக்கமான வருவாய்த்துறை பணிகள் முடங்கின.துணை தாசில்தார் பட்டியல் திருத்தத்துக்குப்பின் பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வை பாதுகாக்கும் அரசாணை வெளியிடவேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் என்கிற பெயர் மாற்றம் செய்த அரசாணை அடிப்படை விதியில் திருத்தம் மேற்கொள்ளவேண்டும்.வருவாய்த்துறை ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும் என்பன உள்பட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.