உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  எண்ணெய் உற்பத்திக்கு ஆமணக்கு தேவை! தனிப்பயிராக பராமரிக்க ஆர்வம்

 எண்ணெய் உற்பத்திக்கு ஆமணக்கு தேவை! தனிப்பயிராக பராமரிக்க ஆர்வம்

உடுமலை: எண்ணெய் உற்பத்திக்கு, தேவை அதிகரிப்பால், வரப்பு பயிராக சாகுபடி செய்யப்பட்ட ஆமணக்கு செடிகளை தனிப்பயிராக பராமரித்து, வருவாய் ஈட்ட உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், மக்காச்சோளம் மற்றும் காய்கறி சாகுபடிகளில், வரப்பு பயிராக மட்டும் ஆமணக்கு செடிகளை நடுவது வழக்கம். பூச்சி, நோய் தடுப்பு பணிகளுக்காக இவ்வழக்கம் பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது, விளக்கெண்ணெய் உற்பத்திக்காக ஆமணக்கு தேவை அதிகரித்து, சீசனில் நல்ல விலையும் கிடைக்கிறது. எனவே, தனிப்பயிராக ஆமணக்கு சாகுபடி செய்யத்துவங்கியுள்ளனர். பாப்பனுாத்து, விளாமரத்துப்பட்டி உள்ளிட்ட செம்மண் விளைநிலங்களில், நடப்பு சீசனில், கலப்பின ரக ஆமணக்கு சாகுபடி செய்துள்ளனர். வேளாண்துறையினர் கூறியதாவது: மானாவாரியில் ஆடிப்பட்டமும், இறவைக்கு வைகாசி மற்றும் கார்த்திகை பட்டம் ஏற்றதாகும். கலப்பின ரகங்கள் சாகுபடிக்கு, விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். மானாவாரியில், ெஹக்டேருக்கு 2 ஆயிரம் கிலோ, இறவையில் 3 ஆயிரம் கிலோ வரை ஆமணக்கு விதை கிடைக்கும். விதைத்த, 45ம் நாளில், பூ உற்பத்தியாகி, நுாறாவது நாள் அறுவடை செய்யலாம். சேலம் ஏத்தாப்பூரில், தமிழ்நாடு வேளாண் பல்கலை., யின், ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையம் வாயிலாக, பல்வேறு தொழில்நுட்ப ஆலோசனைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆராய்ச்சி நிலையத்திலிருந்து, ஒய்.ஆர்.சி.எச்.,1 என்ற வீரிய ஒட்டு ஆமணக்கு 2009ல், வெளியிடப்பட்டுள்ளது. குறைவான வயது உடையதால் மானாவாரிக்கும், பாசனநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கும் இந்த ரகம் மிகவும் ஏற்றது. இவ்வாறு, தெரிவித்தனர். விவசாயிகள் கூறுகையில், 'ஆமணக்கு சாகுபடியில், அதிக பராமரிப்பு செலவு இல்லை. அறுவடை சீசனில், விதை கிலோ 45 - 55 ரூபாய் விலை கிடைக்கிறது. தேவை அதிகரிப்பால், நடப்பு சீசனில் மேலும் விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ