பல்லடம்: பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள பூமிதான நிலத்தை பிரித்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது, பல்லடம் அருகே, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் ஒன்றியம், இச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாவிதன் மனைவி பழனாத்தாள் 75. இரண்டு மகன்கள் மற்றும் மகள்கள் உள்ளனர். ரங்கநாவிதன் பெயரில், 2.7 ஏக்கர் பூமிதான நிலம் இச்சிப்பட்டியில் உள்ளது. அவர் இறந்தபின், அவரின் மகன் காந்தி மற்றும் மகள் மாறாள் ஆகியோரின் வாரிசுகள் லோகேஷ், தாமரை, அனுஷ்கா ஆகியோர் நிலத்தை அனுபவித்து வருகின்றனர். பல லட்சம் ரூபாய் மதிப்புடைய இந்த பூமிதான நிலத்தை, ஆளுங்கட்சியின் சிலர் அபகரிக்க முயற்சிப்பதாக, ரங்கநாவிதனின் வாரிசுகள் ஏற்கனவே புகார் தெரிவித்திருந்தனர். பூமிதான நிலத்தில், மஞ்சள் சோளம் மற்றும் தட்டைப்பயிறு ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இச்சூழலில், இந்த நிலத்தில், 68 பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள பூமிதான நிலத்தில், பட்டா வழங்கும் நடவடிக்கை இப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இப்பகுதி சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: பூமிதான நிலம் என்பது முழுமையாக விவசாய பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டது. அதனை ரத்து செய்து, வேறு யாருக்காவது வழங்குவதாக இருந்தால், விவசாய பயன்பாட்டுக்கு தான் வழங்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இச்சிப்பட்டியில் உள்ள பூமிதான நிலத்துக்கு பாத்தியப்பட்ட வாரிசுகள், அவ்வப்போது பயிர் சாகுபடி செய்தும், ஆடு மாடுகள் மேய்த்தும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். படிப்பறிவில்லாத அவர்களிடம், பூமிதான நிலத்தை பறித்து, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது, பூமிதான வாரியத்தின் விதிமுறைகளை மீறும் செயல். அதுவும், நிலத்தில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், பயிர்களை அழித்து பட்டா வழங்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. எனவே, ஓட்டு அரசியலுக்காக நடக்கும் இந்த நடவடிக்கை முழுமையான விதி மீறலாகும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, ஆர்.ஐ.லிஜாஸ் அஹமதுவிடம் கேட்டதற்கு, ''கலெக்டர் அறிவுறுத்தலின்படிதான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டே பூமி தான நிலம் என்பது ரத்து செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.