திருப்பூர்: நடப்பு பருத்தி ஆண்டில், தினசரி பஞ்சு வரத்து அதிகரித்து, ஒரு லட்சம் பேல்களை தாண்டியுள்ளது. மத்திய ஜவுளித்துறை கமிஷனரகம், நடப்பு பருத்தி ஆண்டில், 305 லட்சம் பேல் அளவுக்கு பஞ்சு மகசூல் கிடைக்கும்; இது, கடந்தாண்டு, 312 லட்சம் பேல்களாக இருந்துள்ளது; மகசூல், 7 சதவீதம் அளவுக்கு குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில், 41 லட்சம் பேல்கள் இறக்குமதி செய்த நிலையில், நடப்பாண்டு, 45 லட்சம் பேல்களாக இருக்கும். மொத்த பருத்தி வரத்து 410 லட்சம் பேல்களாக இருக்கும். நுாற்பாலைகள் தரப்பில், 290 லட்சம் பேல்; ஜவுளி அல்லாத பஞ்சு தேவைக்காக, 10 லட்சம் பேல் என, 300 லட்சம் பேல் பஞ்சு தேவைப்படும். நடப்பாண்டிலும், பஞ்சு உபரி, 110 லட்சம் பேல்களுக்கு அதிகமாக இருக்கும். அதன்படி, 17 லட்சம் பேல்கள் வரை ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதற்கு பிறகும், பஞ்சு கையிருப்பு, 93 லட்சம் பேல்களாக இருக்கும் என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக நுாற்பாலை உரிமையாளர்கள் கூறுகையில், 'நடப்பு பருத்தி ஆண்டில், இம்மாதம் பஞ்சு வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, 10ம் தேதியில் இருந்து, தினசரி வரத்து, ஒரு லட்சம் பேல்களை தாண்டியுள்ளது. பஞ்சு விலை, ஒரு கேண்டி (365 கிலோ) 52 ஆயிரம் முதல், 53 ஆயிரம் ரூபாய் வரை தொடர்கிறது. புதிய பஞ்சு வரத்து அதிகரித்துள்ளதால், இந்திய பருத்திக்கழகம் இருப்பு வைத்திருந்த பஞ்சை, கேண்டிக்கு, 500 ரூபாய் வரை தள்ளுபடி விலையில் வழங்கி வருகிறது. கடந்த, 14ம் தேதி நிலவரப்படி, கடந்த பருத்தி ஆண்டில் இருப்பு வைத்திருந்த 100 லட்சம் பேல் பஞ்சில், 90.44 லட்சம் பேல் பஞ்சு விற்பனை செய்துள்ளது,' என்றனர்.