திருப்பூர்:'தாராபுரம், சீத்தக்காடு பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில், கடந்த, 8 ஆண்டுகளாக முதலை நடமாட்டம் இருக்கிறது; அதனால், மக்களுக்கு இடையூறு இல்லை' என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.திருப்பூர், தாராபுரத்தில் இருந்து அலங்கியம் வழியாக பழநி செல்லும் சாலையில் சீத்தக்காடு உள்ளிட்ட சில இடங்கள் உள்ளன. இவ்வழியில், அமராவதி ஆறு ஓடுகிறது. ஆற்றின் கரையில் பழமையான சங்கிலி கருப்பன் கோவில் உள்ளது.அதனருகே உள்ள தடுப்பணையில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் குளிப்பது வழக்கம்; இந்த தடுப்பணை வழியாக, மக்கள், மறுகரைக்கும் செல்வர். இந்நிலையில், இரு நாளுக்கு முன், தடுப்பணை அருகே முதலை இருப்பதை, பொதுமக்கள் சிலர் பார்த்து, அச்சமடைந்தனர்.இது குறித்து, காங்கயம் ரேஞ்சர் தனபால் கூறியதாவது:அலங்கியம் பகுதியில் உள்ள ஆறு, பெரிதாக உள்ளது. கடந்த, 8 ஆண்டாகவே, முதலைகள் இருக்கின்றன. அவற்றின் வாழ்விடத்தில் தான் அவை உள்ளன. இதுவரை, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தவில்லை.இரண்டு முறை, முத லையை பிடிக்க முயற்சி செய்தோம். அவை, தப்பிவிட்டன. ஆற்றுநீர் வற்றினாலோ, அல்லது முதலை நிலப்பகுதிக்கு வந்தால் மட்டுமே பிடிக்க முடியும். முதலை நடமட்டம் உள்ள இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.