உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / "கிருஷ்ணரிடம் சரணாகதி அடைந்தால் பிறவி இல்லை

"கிருஷ்ணரிடம் சரணாகதி அடைந்தால் பிறவி இல்லை

அவிநாசி : ''கிருஷ்ண பக்தி இருந்தால், அந்நாட்டில் அமைதியான சூழ்நிலை கண்டிப்பாக இருக்கும்; கிருஷ்ணரிடம் முழுமையாக சரணாகதி அடைந்தால், அடுத்த பிறவி கிடையாது,'' என 'இஸ்கான்' அமைப்பை சேர்ந்த ஸ்ரீனிவாச ஹரிதாச சுவாமிகள் பேசினார். கோவையில் உள்ள அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில், அவிநாசியில் 'சரணாகதி - ஓர் ஆன்மிக ரகசியம்' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது. கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் இருந்து ராம நாம சங்கீர்த்தனத்துடன், கிருஷ்ணரும், ராதையும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சின்னைய கவுண்டர் திருமண மண்டபத்தில் சிறப்பு வழிபாடு, ஆரதி மற்றும் பூஜைகள் நடந்தது. 'இஸ்கான்' அமைப்பை சேர்ந்த ஸ்ரீனிவாச ஹரிதாச சுவாமிகள், 'சரணாகதி' என்ற தலைப்பில் பேசியதாவது: ஸ்ரீமத் பாகவதம் உண்மையே; இதில் கூறப்பட்ட கருத்துக்களை வேறு யாரும் கூறவில்லை. ஒரு சமயம் பரிஷத் மஹாராஜா ஆட்சி செய்யும்போது, அங்கு வந்த கலி புருஷன், அந்நாட்டில் தங்கப்போவதாக கூறினார். சூதாட்டம், மது அருந்துதல், மாமிசம் சாப்பிடுதல், தகாத உறவு ஆகியன நடந்தால், கண்டிப்பாக தங்குவேன் என்கிறார். நாடு முழுவதும் சுற்றிப்பார்த்து கலி புருஷன் ஏமாற்றம் அடைகிறார். ஏனெனில், மேற்கண்டவை எதுவுமே நடக்கவில்லை. மக்கள் பக்தியில் திளைத்து இருந்தனர். தர்மத்தின்படி வாழ்ந்தனர். பரிஷத் மஹாராஜா அந்தளவுக்கு ஆட்சியை செம்மையாக நடத்தினார். கிருஷ்ண பக்தி இருந்தால், அந்நாட்டில் அமைதியான சூழ்நிலை கண்டிப்பாக இருக்கும். வாய்மை, எண்ணத்தூய்மை, கருணை மற்றும் தவ வலிமை ஆகிய நான்கு கால்களில் தர்மம் நிற்கிறது. தர்மத்தை கடைபிடிப்பது மட்டுமே கிருஷ்ண பக்தியாகும். சாதன பக்தி, பாவ பக்தி, பிரேம பக்தி என்று மூன்று வகையான பக்தி உள்ளது. கிருஷ்ண பக்தியில் முன்னேறுவதற்கான வழிமுறைகளை சாதன பக்தி கற்றுத்தருகிறது. இன்று வெளிநாடுகளில் வசிக்கும் பல்வேறு மதத்தவர்கள், ஸ்ரீமத் பாகவதத்தை படித்துணர்ந்து, அதன்படி நடக்கின்றனர்; கிருஷ்ணரை பற்றி அறியாத அவர்கள், பக்தியை பரப்புகின்றனர். ஆனால், பாகவதம் தோன்றிய நமது நாட்டில், நாம் அனைத்தையும் மறந்து விடுகிறோம். இந்தியாவில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்; ஏனெனில், பாகவதத்தை கிருஷ்ணர் இங்கு தான் 5,000 ஆண்டுக்கு முன் அருளினார். கிருஷ்ணரிடம் முழுமையாக சரணாகதி அடைந்தால், அடுத்த பிறவி கிடையாது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை