திருப்பூர் : இந்து முன்னணி நிர்வாகியை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது,
திருப்பூர் வடக்கு போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து
விசாரிக்கின்றனர். திருப்பூர் சத்யா காலனியை சேர்ந்த அன்னலட்சுமி மகன்
சக்திவேல் (24); இந்து முன்னணி வடக்கு நகர தொண்டரணி செயலாளர்; கடந்த 2010,
ஜூலை 7ல் நடந்த அடிதடி பிரச்னையில், சக்திவேல் மற்றும் அவரது நண்பர்
மகேந்திரன் மீது, திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு
செய்யப்பட்டது. அப்போது சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டராக செட்ரிக் இமானுவேல்
இருந்தார். திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள இந்து முன்னணி தலைமை
அலுவலகத்துக்கு சென்ற இன்ஸ்பெக்டர் செட்ரிக் இமானுவேல், அங்கிருந்த
சக்திவேல் மற்றும் மகேந்திரனை கடுமையாக தாக்கினார்; சக்திவேல் வாயில்
துப்பாக்கியை சொருகி, சுட்டுவிடுவதாக கொலை மிரட்டல் விடுத்ததாகவும்,
நல்லூரில் உள்ள ரூரல் போலீஸ் ஸ்டேஷனுக்கு சக்திவேலுவை அழைத்துச்சென்ற
போலீசார், அங்கு காலில் அடித்து எலும்பை உடைத்து விட்டதாகவும் இந்து
முன்னணி தரப்பில் புகார் எழுந்தது. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்,
கோவை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட சக்திவேல், ஜாமினில் வெளியே
வந்தார்; இதன்பின், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்; 15 நாள்
சிகிச்சைக்கு பின், கால் குணமடைந்தது. போலீசார் பிடிக்கச் சென்றபோது
தப்பிய சக்திவேல், சுவரில் ஏறி ஓடிய போது கீழே விழுந்ததில் கால் உடைந்ததாக
போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், கடுமையாக தாக்கியதால்தான் கால்
உடைந்ததாக, டாக்டர் அளித்த சான்றிதழில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து,
சென்னை ஐகோர்ட்டில் சக்திவேல் தாயார் அன்னலட்சுமி வழக்கு தொடர்ந்தார்; ஆறு
மாதங்களுக்கு முன், இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு
டி.எஸ்.பி.,க்கு, ஐகோர்ட் உத்தரவிட்டது; ஆனால், திருப்பூர் போலீசார்
விசாரணை அறிக்கை தரவில்லை; இந்து முன்னணி தரப்பில் கோர்ட் அவமதிப்பு வழக்கு
தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து, உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ்
துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. இன்ஸ்பெக்டர் மீது கொலை முயற்சி செய்ததாக,
இந்திய தண்டனை சட்டம் 307 பிரிவின் கீழ் திருப்பூர் வடக்கு போலீசார்
வழக்குப்பதிவு செய்தனர். செட்ரிக் இமானுவேல், தற்போது சென்னையில்
பணிபுரிகிறார்.