உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மிக்ஸி, கிரைண்டர், பேன் வினியோகம்

மிக்ஸி, கிரைண்டர், பேன் வினியோகம்

அவிநாசி : அய்யம்பாளையத்தில் நேற்று அடை மழை பெய்த போதிலும், இலவச கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி வழங்கும் திட்டத்தை அமைச்சர் சண்முகவேலு துவக்கி வைத்தார்.அவிநாசி தாலுகா, அய்யம்பாளையத்தில் இலவச பொருட்கள் வழங்கும் விழா நேற்று பிற்பகல் 3.00 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக, பந்தல், அலங்கார மேடை, வரவேற்பு கொடிகள், டிஜிட்டல் பேனர்கள், எம்.ஜி.ஆர்., பாடல்கள் என்று அய்யம்பாளையம் கிராமமே அல்லோலப்பட்டது. பயனாளிகளும், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மதியம் 2.00 மணியில் இருந்து விழா பந்தலில் காத்திருந்தனர்.மதியம் முதலே மேகமூட்டமாக காணப்பட்ட வானம், மாலை 3.45 மணிக்கு மழையை பொழிய ஆரம்பித்தது. அடை மழையிலும் சிலநிமிடங்கள் தாக்குப்பிடித்த பொதுமக்களும், கட்சியினரும் பாதுகாப்பான இடம் தேடி ஓடினர். சிலர் மேடைக்கு கீழே தஞ்சம் புகுந்தனர். தொடர்ந்து மழை பொழிந்த போதிலும், மாலை 4.23 மணிக்கு அமைச்சர் சண்முகவேலு, கலெக்டர் மதிவாணன், எம்.எல்.ஏ.,க்கள் ஆனந்தன், கருப்பசாமி, பரமசிவம் மற்றும் அதிகாரிகள் வந்தனர். அப்போதும் மழைநீடித்தது. குடைகளை பிடித்தவாறே, அமைச்சர், கலெக்டர் ஆகியோர் அங்கிருந்த சிறிய நூலக கட்டடத்துக்குள் நுழைந்தனர். அமைச்சரும், கலெக்டரும் நடத்திய ஆலோசனைக்கு பின், அங்கு வைத்தே இலவச பொருட்களை வினியோகித்தனர்; 10 பயனாளிகள் மட்டும், நூலகத்துக்கு வந்தனர்.அமைச்சர் சண்முகவேலு பேசியதாவது: ஒரு விஷயம் நடக்கும்போது மழை வருவது மிகவும் நல்லது. அவிநாசி பகுதியில் பெய்த மழை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்விழாவை யாராலும் மறக்க முடியாது. மழைத்தாய் அளித்த மகிழ்ச்சியோடு, முதல்வர் அளித்துள்ள தாய் வீட்டு சீதனங்களை எடுத்துச் சென்று பயன்பெறுங்கள். உங்களது பணிச்சுமையை குறைக்கும் வண்ணம் முதல்வர் வழங்கியுள்ளதை என்றுமே நீங்கள் மறக்கவே கூடாது; தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும், என்றார்.உதவி கலெக்டர் ராமமூர்த்தி, ஆர்.டி.ஓ., செங்கோட்டையன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.எம்.எல்.ஏ., கருப்பசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி