உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 40 ஆயிரம் நாட்டுக்கோழிக்கு ஆர்டர்: பல்லடம் பண்ணையாளர்கள் "குஷி

40 ஆயிரம் நாட்டுக்கோழிக்கு ஆர்டர்: பல்லடம் பண்ணையாளர்கள் "குஷி

பல்லடம் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கேரளா, கர்நாடகத்தில் இருந்து 40 ஆயிரம் நாட்டுகோழிகளுக்கு ஆர்டர் வந்துள்ளதால், பல்லடம் பகுதியில் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பண்ணையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் பல்லடம், பொங்கலூர், உடுமலை அடங்கிய பல்லடம் பகுதி கறிக்கோழி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. நாட்டுக்கோழி விலை அதிகம் என்பதால் வெளிமாநிலங்களில் விற்பனை செய்வதில் பல இடர்பாடுகள் ஏற்படும் என்ற அச்சத்தில் பலர், நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட ஆர்வம் காட்டுவதில்லை. இருப்பினும், பல்லடம் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்டோர், பண்ணை அமைத்து நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டுக்கோழி குஞ்சு ஒன்று 30 ரூபாய்க்கு ஈரோடு, நாமக்கல் பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்து பல்லடம் பகுதி பண்ணையாளர்கள் வளர்க்கின்றனர். நாட்டுக்கோழி 90 நாளில் ஒரு கிலோ 250 கிராம் எடை கொண்ட கோழியாக வளர்கின்றன. கடந்த மாதம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட நாட்டுக்கோழி தற்போது 110 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கிலோ 55 ரூபாயாக உள்ளது. கேரளா, கர்நாடகத்தில் இருந்து முதன் முறையாக, தீபாவளியை முன்னிட்டு, 40 ஆயிரம் நாட்டுக்கோழிகளுக்கு ஆர்டர் வந்துள்ளது; இது, பல்லடத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பண்ணையாளர் களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ