உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தனியார் சுத்திகரிப்பு நிலையங்களை திறக்க எதிர்பார்ப்பு : தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தனியார் சுத்திகரிப்பு நிலையங்களை திறக்க எதிர்பார்ப்பு : தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

திருப்பூர் : 'ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தை முறையாக செயல்படுத்துவதாக விண்ணப்பித்துள்ள தனியார் சுத்திகரிப்பு நிலையங்களையும், சாயம் பயன்படுத்தாத சலவை ஆலைகளையும் உடனடியாக திறக்க ஏற்பாடு செய்தால், 40 சதவீத சாயப்பிரச்னை தீரும்,' என, தமிழக அரசுக்கு பின்னலாடை தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூரில் 152 தனியார் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. இவற்றில் 74 ஆலைகள், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை முறையாக செயல்படுத்த முடியும் என உறுதி கூறி, மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் கடிதம் கொடுத்துள்ளன. அதிகாரிகள் குழு ஆய்வு நடத்திய பின், ஒன்பது ஆலைகள் மட்டும் இயங்க இசைவாணை வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்துள்ள 74 ஆலைகளில், 73 ஆலை களை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு நடத்தி முடித்துள்ளனர்.பொது சுத்திகரிப்பு நிலையங்களில் 70 சதவீத பனியன் துணிகளுக்கு சாயமிடப்பட்டாலும், தனி யார் சுத்திகரிப்பு நிலையங்களில் மீதமுள்ள 30 சதவீதம் அளவுக்கு சாயமிடப்படுகின்றன. இந்த ஆலை களை திறக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பின்னலாடை தொழில் துறையினர் கூறியதாவது:பொது சுத்திகரிப்பு நிலையங்களின் பிரச்னைகள் ஓரிரு மாதங்களில் தீர்ந்துவிடும் என நம்புகிறோம். இருப்பினும், கோடை கால ஆர்டர்கள் ஒப்பந்தமாகும் இந்நேரத்தில், தயார் நிலையில் உள்ள தகுதிவாய்ந்த தனியார் சுத்திகரிப்பு ஆலைகளை திறக்க, அரசு அனுமதி பெற்றுத்தர வேண்டும். அவ்வாறு செய்யும்போது, வெளிமாநிலங்களுக்கு சென்று சாயமிட வேண்டிய அவலம் தவிர்க்கப்படும். மேலும், சாயத்தொழில் சிவப்பு நிறமாக வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், சாயம் மற்றும் கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தாத சலவை ஆலைகள் 'ஆரஞ்ச்' என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தனியார் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்துள்ள 66 சலவை ஆலைகளையும் உடனடியாக இயக்க அனுமதிக்க வேண்டும். இதுவரை, சாயத்தொழிலும், சலவை தொழிலும் ஒரே நிலையில் இருந்தன. அதை மாற்றி, சாயம் மற்றும் சலவை என தனித்தனி அமைப்புகளாக செயல்படுத்த வேண்டும்.தற்போதுள்ள நெருக்கடி நிலையை சமாளிக்க வேண்டுமெனில், தனியார் சுத்திகரிப்பு நிலையங்களையும், சலவை ஆலைகளையும் உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் 40 சதவீத சாயப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ