உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பூட்டிக்கிடக்கும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்கள் :பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை

பூட்டிக்கிடக்கும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்கள் :பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர் : அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் கட்டப்பட்ட நூலகங்கள், ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் திறக்கப்படாமலேயே உள்ளன. கிராமப்புற மாணவர்கள், பொதுமக்களுக்கு பயன்படும் வகையில், பூட்டிக்கிடக்கும் அந்நூலகங்களை திறக்க முயற்சி எடுக்க வேண்டும். அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் எல்லா கிராமங்களிலும் நூலகம் அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு நூலகங்கள் கட்டப்பட்டன. ஒவ்வொரு நூலகத்துக்கும், பொது அறிவு, அறிவியல், வரலாறு, நாவல் உள்ளிட்ட தலைப்புகளில் 1,000 புத்தகங்கள் வழங்கி செயல்படுத்த திட்டமிடப்பட்டது. கிராமப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயன்பட வேண்டும் என்ற அடிப்படையில், நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், நூலகம் கட்டடப்பட்டு, ஓராண்டுக்கு மேலாகியும் பெரும்பாலான இடங்களில் திறக்கப்படாமலேயே உள்ளன. இந்நூலகங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் இடையே எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக அந்தந்த பகுதிகளை சேர்ந்த, பகுதிநேர நூலகர்களை கொண்டு, நூலகங்களை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டது. அரசு வேலைபோல் இல்லாமல், மிகவும் குறைவாக ரூ.400, ரூ.500 என ஊதியம் வழங்குவதால், இப்பணியில் ஈடுபட யாரும் முன்வருவதில்லை. 'பெரும்பாலான நூலகங்களில், கட்டுமான பணி முடிந்து, புத்தகங்கள் கூட கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால், நூலகர்கள் இல்லாத காரணத்தால் திறக்கப்படாமல் உள்ளது. நூலகங்களை திறக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஊராட்சிகளில் உள்ள அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களை, மாவட்ட நூலக ஆணைக்குழு கண்காணிப்புக்கு கீழ் மாற்றி, நூலகர்களை நியமித்து பொதுமக்களுக்கு பயன்படும் வகையில், முறையாக செயல்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி