திருப்பூர் : குடியிருப்பு பகுதிகளை ஆக்கிரமித்து வந்த பிளாஸ்டிக் கழிவுகள், தற்போது விவசாய நிலங்களையும் ஆக்கிரமித்து வருகின்றன. அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டால், விவசாய நிலங்கள் மலடாகும் ஆபத்து உள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது, தமிழக அரசு 60 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்துள்ளதோடு, படிப்படியாக பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. ஆனால், திருப்பூர் பகுதிகளில் விதிமுறையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன. உணவு பொருட்கள் முதல் அனைத்து பயன்பாட்டுக்கும் தற்போது பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன்பாட்டால், திருப்பூரில் சேகரமாகும் குப்பையில் 90 சதவீதம் வரை பிளாஸ்டிக் கழிவுகளாகவே உள்ளன. இவை எளிதில் மக்காத தன்மை உடையதால், மழை நீர் நிலத்துக்குள் செல்வதை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. சாக்கடை மற்றும் மழை நீர் வடிகால், பொது இடங்களில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுப்புற சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களின் ஆபத்தை உணராத மக்கள் தொடர்ந்து இதை பயன்படுத்தி வருகின்றனர்.கடைகளில் சிறிய பொருட்கள் முதல் பெரிய பொருட்கள் வாங்கும்போதும், டீ, சாப்பாடு உள்ளிட்ட உணவு பொருட்களுக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால், உணவு பொருட்கள் விஷமாகும் தன்மை, செரிமான பிரச்னை, கல்லீரல், சுவாச கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் மனிதர்களை தாக்கும் அபாயம் உள்ளது. நகர பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அதிகரித்த பிளாஸ்டிக் பயன்பாடு, தற்போது கிராம பகுதிகளையும் ஆக்கிரமித்துள்ளது. இதனால், கிராம பகுதிகளிலும் அதிகரிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதித்து வருகின்றன.விவசாய நிலங்கள், நீர் நிலைகளை பிளாஸ்டிக் கழிவுகள் ஆக்கிரமித்துள்ளன. திருப்பூர் சுற்றுப்புற கிராமங்களிலும் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கழிவுகள் மயமாக உள்ளன. இதனால், விவசாய நிலங்களில் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்படுவதோடு, மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணில் புதைவதால் மண் தரத்தை இழந்து, நீர் இழுக்கும் சக்தியை இழந்து, மலடாக மாறி வருகின்றன. பல்வேறு பிரச்னைகளால் பாதித்து வரும் விவசாயம், தற்போது பிளாஸ்டிக் கழிவுகளால் கடுமையாக பாதித்து வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் பிளாஸ்டிக் பொருட்கள் பிரச்னையில் தனி கவனம் செலுத்துவதோடு, தயாரிப்பு மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளே மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு, விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியிருப்புகள், விவசாய நிலங்களில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும்.