உடுமலை : உடுமலை நகராட்சியில், வீடு தேடிச் சென்று வரி வசூல் செய்வதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்காக, 4 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட வாகனமும் பயன்பாடின்றி காட்சிப்பொருளாக மாறியுள்ளது.திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில், 33 வார்டுகளில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வளர்ந்து வரும் நகரமாக உள்ள உடுமலையில், நூற்பாலைகள், காற்றாலை நிறுவனங்கள் உட்பட பல்வேறு தொழில்கள் துவங்கப்பட்டுள்ளன. இதனால் உடுமலை தாலுகாவில் ஆண்டுக்கு 30 சதவீதம் என்ற அளவில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. புதிது, புதிதாக நூற்றுக்கணக்கான குடியிருப்புகளும், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகளும் உருவாகி வருகின்றன. நகரப்பகுதியில் கட்டப்படும் வீடுகள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்களுக்கு நகராட்சிக்கு குறிப்பிட்ட தொகை வரியாக செலுத்தப்படுகிறது. குடிநீர் வரி, சொத்து, தொழில், வீட்டு வரிகள் செலுத்தப்படுகின்றன. ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, வரி வசூலிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நாட்களுக்குள் வரி செலுத்துவது குறித்து அறிவிப்பும் அவ்வப்போது, நகராட்சி அதிகாரிகள் மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்படும். நகராட்சி அலுவலகத்தில் செயல்படும் வரிவசூல் மையத்திற்கு வரி செலுத்த அனைவரும் வர வேண்டிய நிலை உள்ளது. இதனால், பலமணி நேரம் வரிசையில் நின்று வரி செலுத்த வேண்டியுள்ளதால், பலரும் இடைத்தரகர்கள் மூலமாகவும் வரி செலுத்தி வந்தனர். மேலும், வரி வசூல் மையத்திலும் போதுமான ஆட்கள் இல்லாத நிலையில், வரி செலுத்த மக்கள் பல மணி நேரம் காத்திருக்கும் அவலம் உள்ளது. இந்நிலையில், வரி செலுத்துவதற்காக வரும் மக்களை அலைகழிப்பதை தடுக்கும் வகையிலும், வீடு தேடிச் சென்று வரி வசூல் செய்யும் திட்டம் குறித்து நகராட்சி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் ஒவ்வொரு தெருவாக சென்று அறிவிப்பு வெளியிட்டு, வாகனத்தின் மூலம் வரி வசூல் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது. இத்திட்டம் மக்களுக்கு பயன்பெறும் என்பதால், இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். இதற்காக நகராட்சி குப்பை வாகனம் நான்கரை லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. இரண்டு கம்ப்யூட்டர் போதுமான உபகரணங்களை உள்ளடக்கிய வாகனமாக மாற்றியமைக்கப்பட்டது. மூன்று பணியாளர்களை நியமித்து வரி வசூல் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது. வாகனத்தில் வரி வசூல் செலுத்த வரும் வாகனம் குறித்து எச்சரிக்கை செய்யும் வகையில் ஒலிபெருக்கி, மணி போன்றவையும் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், வாகனம் தயார் நிலையில் இருந்தாலும், போதுமான ஆட்கள் இல்லாத நிலையில், திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. வீடு தேடி வரி வசூல் செய்ய அதிகாரிகள் வருவார்கள் என எதிர்பார்ப்புடன் இருந்த மக்களும் ஏமாற்றமடைந்தனர்.அதிகாரிகளும் இத்திட்டத்தை செயல்படுத்த போதிய ஆர்வம் காட்டாததால், நான்கு லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட வாகனம் பயன்பாடின்றி கடந்த இரண்டு ஆண்டுகளாக நகராட்சி வளாகத்தில் காட்சிப்பொருளாக நின்று கொண்டுள்ளது. இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,' நகராட்சியில், வரிவசூல் செய்வதற்காக வரிவசூல் வாகனம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால், மக்கள் நேரிடையாக வரி செலுத்த ஆர்வம் காட்டினர். எனவே, வரி வசூல் வாகனத்தை பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஆய்வு, நகராட்சி பதிவேடுகளை எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட மற்ற பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது,' என்றனர்.