உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கடைசி ஆசை :வளர்ச்சி பணி நடந்த இடங்களில் கல்வெட்டு; திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் மும்முரம்

கடைசி ஆசை :வளர்ச்சி பணி நடந்த இடங்களில் கல்வெட்டு; திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் மும்முரம்

திருப்பூர் : திருப்பூர் மேயர் மற்றும் கவுன்சிலர்களின் பதவி காலம் அடுத்த மாதம் நிறைவடைகிறது. வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, மீண்டும் 'சீட்' கிடைக்குமா? கிடைத்தாலும் வெற்றி பெற்று, மாமன்றத்துக்கு வர முடியுமா என்ற சந்தேகம் கவுன்சிலர்கள் மத்தியில் எழுந்துள்ளதால், கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற, முக்கியமான வளர்ச்சி பணிகளில் தங்களது பெயர் இருக்கும் வகை யில் கல்வெட்டுகள் பதிக்கும் பணியில் தீவிரமாக உள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், அடுத்த மாதம் நடைபெற உள்ளது. தற்போதுள்ள மேயர் மற்றும் கவுன்சிலர்கள் பதவி காலம் முடிய உள்ளதால், கடந்த ஐந்தாண்டு காலம் மேற்கொண்ட வளர்ச்சி பணிகளில் முக்கியமான இடங்களில் தங்களது பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கல்வெட்டு பதிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூரை மாநகராட்சியாக தரம் உயர்த்திய பின், ரூ.4.50 கோடி செலவில் புதிய அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டது. அலுவலக கட்டுமான பணி 90 சதவீதம் முடிந்துள்ளது. அலுவலர்களுக்கான அறைகளுக்கு 'பார்ட்டீசியன்' பணிகள் வரை நிறைவடைந்துள்ளது. பெயின்டிங், முன்பக்க தளம், மின் உபகரணங்கள் பொருத்தும் பணிகள் மீதம் உள்ளன. உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளதால், மீண்டும் போட்டியிட 'சீட்' கிடைக்குமா? கிடைத்தாலும் வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகம், தற் போதைய கவுன்சிலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, தங்களது பெயர் மாநகராட்சி கட்டடத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அடிக்கல் நாட்டு விழா கல்வெட்டு, அவசரம், அவசரமாக புதிய கட்டடத்தின் பிரதான நுழைவாயில் அருகே பதிக்கப்பட்டுள்ளது. தி.மு.க., மேயர், கவுன்சிலர்கள், அதிகாரிகள் பெயர் இடம் பெற்றுள்ளது. வழக்கமாக திறப்பு விழா முடிந்த பின்பே, அதன் கல்வெட்டுடன், அடிக்கல் நாட்டு விழா கல்வெட்டு வைக்கப்படும். தற்போது அ.தி.மு.க., ஆட்சி நடைபெறுவதாலும், வரும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பதவிக்கு வருபவர்கள், பழைய அடிக்கல் நாட்டு விழா கல்வெட்டை, புதிய கட்டடத்தில் பதிப்பார்களா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சியாக தரம் உயர்த்தி, புதிய கட்டடம் கட்டும் பணிக்கு முயற்சித்த, தங்களது பெயர் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதற்காக, பணி முழுமையாக முடிவடைவதற்கு முன்பே அடிக்கல் நாட்டு விழா கல்வெட்டை பதித்து, தங்கள் பெயரை புதிய கட்டடத்தில் பதிவு செய்து விட்டனர். இதேபோல், 28வது வார்டு பகுதியில் கழிவு நீர் செல்லக்கூடிய பெரிய அளவிலான சாக்கடை கால்வாய் மீது, கான்கிரீட் ரோடு போல் நீண்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. அதிலும், கல்வெட்டு நிறுவியுள்ளனர். பழைய கல்வெட்டு பாலம் மீது, புதிதாக மூன்றடி உயரத்துக்கு கட்டடம் கட்டி, மேயர் மற்றும் கவுன்சிலர் பெயர் உள்ள கல்வெட்டை நிறுவியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை