அவிநாசி : 'வரும் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு பகுதியில்
மட்டுமின்றி, பொது ஒதுக்கீடு இடங்களிலும் பெண்கள் போட்டியிட வேண்டும்,'
என்று தன்னார்வ தொண்டு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் அடுத்த
மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி,
ஊராட்சிகளில் இட ஒதுக்கீட்டை மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
மொத்தமுள்ள இடங்களில் 33 சதவீதம் பெண்கள் போட்டியிடுகின்றனர். பெண்களுக்கான
இட ஒதுக்கீட்டில் மட்டுமின்றி, பொது இடங்களிலும் பெண்கள் போட்டியிட
வேண்டுமென தன்னார்வ தொண்டு நிறுவனம் வலியுறுத்தி வருகிறது. அவிநாசியில்
இயங்கும் சமூகக்கல்வி மற்றும் முன்னேற்ற மையத்தினர், கடந்த ஒரு மாதமாக,
திருப்பூர், அவிநாசி மற்றும் சூலூர் ஒன்றியங்களில், 'உள்ளாட்சி பெண்களின்
பங்கேற்பு' குறித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. உள் ளாட்சி தேர்தலில்
போட்டியிடும் முறை, பிரசாரம் செய்வது, வேட்பு மனுத்தாக்கல் ஆகியன குறித்து
பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 'உள்ளாட்சி தேர்தலில் பெண்கள்'
என்ற தலைப்பில், சுவரொட்டிகளும் வெளியிடப்பட உள்ளன. சமூகக்கல்வி மற்றும்
முன்னேற்ற மையத்தின் இயக்குனர் நம்பி கூறியதாவது: உள்ளாட்சியில் பெண்கள்
பங்கேற்பு இன்றியமையாதது. சமூகத்தில் இன்று பல நிலைகளில் பெண்கள்
உயர்ந்துள்ளனர். பெண்கள் நுழையாத துறையே இல்லை என்ற அளவுக்கு, அவர்களின்
முன்னேற்றம் அதிகரித்து வருகிறது. உள்ளாட்சியிலும் பெண்கள் பங்கேற்பதன்
அவசியம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பயிற்சி பட்டறை,
சிறப்பு முகாம் மூலம் தேர்தல் குறித்த விழிப்புணர்வை உருவாக்கியுள்ளோம்.
பெண்களுக்கான இடம் மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் பெண்கள் போட்டியிட
வேண்டும். 'உள்ளாட்சியில் பெண்கள்' என்ற தலைப்பின் கீழ், ஆறு ஓவியங்களை
வரைந்து, சுவரொட்டியாக அச்சடித்துள்ளோம். தேர்தல் நடைமுறை, ஓட்டு
சேகரித்தல், பிரசாரம் செய்யும் முறை, ஓட்டு எண்ணிக்கை முறை, விதிமுறை மீறல்
குறித்து பெண்களுக்கு விரிவாக விளக்க, பெண் வேட்பாளர்களுக்கு சிறப்பு
முகாம் நடத்த உள்ளோம். பெண்களுக்கான அனைத்து உரிமைகளையும் வென்றெடுக்க,
உள்ளாட்சி தேர்தலை களமாக பெண்கள் பயன்படுத்துவதற்கான நடைமுறைகளை ஏற்படுத்தி
வருகிறோம், என்றார்.