திருப்பூர் : ''இந்தாண்டு இறுதிக்குள், அகில இந்திய அளவில் ரூ.10 ஆயிரம்
கோடிக்கு வர்த்தகம் செய்ய, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,'' என
எல்.ஐ.சி., செயல் இயக்குனர் ராய் சவுத்ரி தெரிவித்தார்.எல்.ஐ.சி.,யின்
சேட்டிலைட் கிளை திறப்பு விழா, திருப்பூர் காங்கயம் ரோட்டில் நேற்று
நடந்தது. செயல் இயக்குனர் (மார்க்கெட்டிங்) ராய் சவுத்ரி, புதிய அலுவலகத்தை
திறந்து வைத்தார். தென்மண்டல மேலாளர் சிங் உடனிருந்தார். பின், அவர்கள்
நிருபர்களிடம் கூறியதாவது: தென்மண்டலத்தில் எல்.ஐ.சி.,க்கு நல்ல வரவேற்பு
உள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய இம்மண்டலத்தில்,
தொழில் வளர்ச்சியில் தமிழகம் சிறந்து இருப்பதால், நல்ல வரவேற்பு
அளிக்கின்றனர். ஜீவன் ஆரோக்கியம், ஜீவன் ஆனந்த் ஆகிய பாலிசிகள் அதிக அளவில்
மக்களை ஈர்த்துள்ளன. தனியாக பிரீமியம் செலுத்துபவர்களுக்காக பீமா பட்ஜெட்
திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.திருப்பூர் கிளையின் வர்த்தக இலக்காக 10 கோடி ரூபாய்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை உள்ளடக்கிய
பகுதிகளுக்கு 50 கோடி ரூபாய் இலக்கும், அகில இந்திய அளவில் ரூ.10 ஆயிரம்
கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலக்கை இந்தாண்டு இறுதிக்குள் எட்ட
வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்தாண்டில் பி.என்.ஜி.எஸ்., குரூப்
பென்ஷன் மூலம் 18 ஆயிரம் கோடி ரூபாய் வரை லாபம் கிடைத்துள்ளது. பெரிய பெரிய
நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெறுபவர்களை கவரும் திட்டமாக இத்திட்டம்
உள்ளது. நடப்பு ஆண்டில் எல்.ஐ.சி., நிர்வாகத்துக்கு தனி பெயரை
பி.என்.ஜி.எஸ்., ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மக்களை கவர்வதற்கு,
வாழ்க்கைக்கு வழிவகுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள், புதிய பாலிசிகளை
அறிமுகப்படுத்த உள்ளோம். திட்ட வரையறைக்காக ஐ.ஆர்.பி., ஒப்புதல்
கேட்டுள்ளோம், என்றனர்.திறப்பு விழா நிகழ்ச்சியில், கோவை மண்டல மேலாளர் சோமசுந்தரம்,
மார்க்கெட்டிங் மேலாளர் கண்ணன், திருப்பூர் மண்டல மேலாளர் சீனிவாசராவ்
உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.