உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போதை மீட்பு மையத்துக்கு சீல்; பொறுப்பாளர் கைது அட்மிட் செய்யப்பட்டவர் பலி எதிரொலி

போதை மீட்பு மையத்துக்கு சீல்; பொறுப்பாளர் கைது அட்மிட் செய்யப்பட்டவர் பலி எதிரொலி

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், காங்கயம், பங்களாபுதுார், களிமேட்டை சேர்ந்தவர் மணிகண்டன், 38. இவரின் குடி பழக்கத்திற்காக, தாராபுரத்தில் இயங்கிய, 'வெற்றி லைப் கேர் பவுண்டேஷன்' என்ற போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில், அவரின் குடும்பத்தினர் மணிகண்டனை சேர்த்தனர்.மூன்று நாட்கள் முன், மணிகண்டன் இறந்து விட்டதாக குடும்பத்தினரிடம் மறுவாழ்வு மைய பொறுப்பாளர் கார்த்திகேயன், 36, தெரிவித்தார்.'கணவர் நன்றாகத் தான் இருந்தார். அவரின் திடீர் மர்ம மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்' என, தாராபுரம் போலீசில், மணிகண்டனின் மனைவி சத்தியவாணி புகார் அளித்தார்.இந்த மையம், உரிமம் பெறாமல் ஆறு மாதமாக இயங்கியது மருத்துவ பணிகள் துறையினரின் ஆய்வில் தெரிந்தது. இதையடுத்து, நேற்றுமுன்தினம் இரவு மையத்துக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்த, 32 பேர், 108 ஆம்புலன்ஸ் உதவியுடன், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மாவட்ட மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனர் சந்திரசேகர் கூறியதாவது:திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தயத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். யோகா சென்டர் நடத்துவதாக, ஒரு வீட்டை, 40,000 ரூபாய் மாத வாடகைக்கு எடுத்தார். படுக்கையறைகளில், குடிக்கு அடிமையானவர்களை மொத்தமாக தங்க வைத்தார். தினமும், மூன்று வேளை மாத்திரை கொடுத்து, குடியில் இருந்து மீண்டு விடலாம் என கூறினார்.அவரின் சிகிச்சையில் இருந்த ஒருவர், திடீரென இறந்தது கூட அங்கிருந்த பலருக்கு தெரியவில்லை. சிலருக்கு உடலில் காயங்கள் உள்ளன.சிகிச்சை பெற்றவர்கள் வெளியே வராமல் இருக்க, 24 மணி நேரமும் கேட் பூட்டி வைக்கப்பட்டுள்ளதால், யாருக்கும் சந்தேகம் வரவில்லை.மணிகண்டன் மரணம் குறித்து மனைவி புகார் தெரிவித்ததால், விசாரணை நடத்தப்படுகிறது. உயிரிழந்தவருக்கு என்ன மருந்து வழங்கப்பட்டது; உயிரிழப்புக்கு காரணம் என்ன என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் தான் தெரிவிக்க முடியும்.சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு போதை மீட்பு மருந்துகளோ, மனநலம் சார்ந்த மாத்திரைகளோ வழங்கப்படவில்லை. நீரிழிவு, ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதற்கு தேவையான மருந்துகள் மற்றும் 'ஆன்டிபயாடிக்' போன்றவை தான் வழங்கப்பட்டுள்ளன.டாக்டர்கள் வந்து சென்றதற்கான பதிவேடுகள் எதுவுமில்லை. மையத்தை நடத்தி வந்த கார்த்திகேயன் விவசாயம் மேற்கொள்கிறார். இவர் குறித்து உரிய விசாரணை நடத்த, தாராபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.புகாரை தொடர்ந்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து, கார்த்திகேயனை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை