தயக்கமின்றி தர்பூசணி சாப்பிடுங்கள்
திருப்பூர், : திருப்பூர் மாவட்டத்தில், 534 ஏக்கர் பரப்பில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க உதவுகிறது; நீர்சத்து குறைபாடுகளை நிவர்த்திசெய்கிறது. இரும்புச்சத்து, வைட்டமின் 'ஏ', 'சி', 'பி1', 'பி6' போன்ற நுண்ணுாட்ட சத்துக்கள், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் உள்ளன.தர்பூசணியில், தக்காளி, சிவப்பு கொய்யா, திராட்சை போன்ற பழங்களில் உள்ளது போன்ற, ''லைகோபீன்' எனப்படும் இயற்கை மூலப்பொருள் உள்ளதால், சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. 'பீட்டா கரோட்டீன்' எனப்படும் நிறமியால், மஞ்சள் நிறத்திலும் பூசணி விளைகிறது.கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, குடைமிளகாய் போன்ற காய்கறிகளிலும் இந்தச்சத்து உள்ளது. 'லைகோபீன்' மற்றும் 'பீட்டா கரோட்டீன்' நமது கண் பார்வை திறனை அதிகரிக்கிறது; கண்புரை நோயில் இருந்து பாதுகாக்கிறது.பழத்தில், 'ஆன்டி ஆக்ஸிடன்டுகள்' அதிகம் இருப்பதால், உடலை ஆரோக்யமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. குறைந்த அளவு 'சுக்ரோஸ்' இருப்பதால், சர்க்கரை நோயாளிகளும் தர்பூசணி பழத்தை தயக்கமின்றி சாப்பிடலாம்.பொதுமக்கள், தர்பூசணியில் செயற்கை நிறமி சேர்க்கப்படுவதாக பரவிய தகவலை நம்ப வேண்டாம். தயக்கமின்றி தர்பூசணியை உண்டு, உடலை பாதுகாக்கலாம். மக்கள் தயக்கமின்றி வாங்கி சாப்பிட்டால், முதியவர்கள் உட்பட அனைவரின் உடல் நலமும் பேணி பாதுகாக்கப்படும்; விளைவித்த பழங்களுக்கும், உரிய விலை கிடைக்கும்.