| ADDED : பிப் 13, 2024 01:18 AM
அவிநாசி:அவிநாசி ஒன்றியம், கருவலுார் ஊராட்சி, சங்கம்பாளையத்தில் ஒரு கழிவு பஞ்சு அரவை மில் செயல்பட்டு வருகிறது. இயந்திரங்களின் இயக்க கூடுதல் மின் உற்பத்திக்காக மின் வாரியத்துறையில் அனுமதி பெறாமல், 100 ஹெச்.பி., மின் உற்பத்தியை கொடுக்கக்கூடிய திறன் கொண்ட இயந்திரத்தை (டைனமோ) சுயமாக நிறுவி பயன்படுத்தி வந்துள்ளனர்.கடந்த 8ம் தேதி கூடுதலாக மின் உற்பத்தி செய்வதற்காக இயக்கிய போது, இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த ஆறடி சுற்றளவும், ஒரு டன் எடை கொண்ட பல் சக்கரம் அதிக அழுத்தம் மற்றும் அதிர்வின் காரணமாக உடைந்து சிதறியது. இதில், உடைந்த பாகங்கள் பல நுாறு அடி துாரம் பறந்து சென்று விழுந்தது. கார் மற்றும் வீடுகளும் சேதமானது.அப்பகுதியினர் கூறுகையில், ''விபத்து நடைபெற்று, 5 நாள் ஆகியும், மின் வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை.அனுமதி பெறாமல் இயக்கிய இயந்திரப் பயன்பாட்டிற்கும் தற்போது வரை அபராதமோ விசாரணையோ மேற்கொள்ளப்படவில்லை. ஒதுக்குப்புறமான கிராம பகுதியில் மின்வாரிய அதிகாரிகளோ ஊழியர்களோ யாரும் ஆய்வுக்கு வருவதில்லை. இதனால்தான் இத்தகைய முறைகேடுகள் நடக்கின்றன'' என்றனர்.திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுமதியிடம் கேட்டபோது, ''கருவலுாரில் நடந்த விபத்து குறித்து தகவல் கிடைத்தது; தன்னிச்சையாக மின்சார உற்பத்தி செய்ய முயற்சி செய்ததாக தெரியவந்துள்ளது. மின்வாரிய குழு மூலம், களஆய்வு நடத்தி, மின்சாரத்தை பயன்படுத்தியது குறித்து, மேலாய்வு செய்யப்படும்,'' என்றார்.