உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உயர்கல்வியுடன் கூடிய வேலை வாய்ப்பு; நாளை துவங்குகிறது தகுதித்தேர்வு

உயர்கல்வியுடன் கூடிய வேலை வாய்ப்பு; நாளை துவங்குகிறது தகுதித்தேர்வு

திருப்பூர் : 'நான் முதல்வன்' திட்டத்தில், உயர்கல்வியுடன் வேலைவாய்ப்பு பெறுவதற்கான தேர்வு, திருப்பூரில் நாளை துவங்குகிறது. பிளஸ் 2 மாணவர்கள், ஆன்லைனில் விண்ணப்பித்து, தேர்வு எழுதலாம்.திருப்பூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:'நான் முதல்வன்' திட்டத்தில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், எச்.சி.எல்., தொழில்நுட்ப நிறுவனம் மூலம், அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிளஸ்2 மாணவர்கள், உயர்கல்வி மற்றும் பயிற்சியுடன் கூடிய பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது.கடந்த 2022 - 23ம் கல்வியாண்டில் 75 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், நடப்பு 2023 - 24 கல்வியாண்டில், பிளஸ் 2 அரையாண்டுத்தேர்வில், 75 சதவீத மதிப்பெண் பெற்று, கணிதம் மற்றும் வணிக கணிதத்தில் 60 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் இந்த திட்டத்தில் சேர தகுதிபெறுகின்றனர்.எச்.சி.எல்., டெக் பி.இ.இ., திட்டம் வாயிலாக, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி மற்றும் எச்.சி.எல்., நிறுவனத்தில் பயிற்சியுடன் பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. சாப்ட்வேர் டெவலப்பர், அனலிஸ்ட், டிசைன் இன்ஜினியர், டேட்டா இன்ஜினியர், சப்போர்ட் அண்டு பிராசஸ் அசோசியேட் ஆகிய ஐந்து பணி வாய்ப்புகள் வழங்கப்படும்.இதற்கான தேர்வு எழுதுவதற்கு, https://registrations.hcltechbee.com/ என்கிற இணையதளத்தில், மாணவர்கள் தங்கள் முழுவிவரங்களை பதிவு செய்யவேண்டும். பதிவு செய்வோருக்கு, விண்ணப்ப எண் இ-மெயிலில் அனுப்பி வைக்கப்படும்.'நான் முதல்வன்' திட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி கட்டணம் முழுவதையும் திறன் மேம்பாட்டு கழகமே வழங்கிவிடும். பயிற்சியின்போது, மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். அரசு உதவி பெறும், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி கட்டண தொகையை வங்கி கடனாகவும் பெற்றுத்தரப்படுகிறது.இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கெங்கு தேர்வு மையம்...

அவிநாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லுாரி மற்றும் காங்கயம் பில்டர்ஸ் பொறியியல் கல்லுாரிகளில், வரும், 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை. திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20 முதல் 22ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.அடுத்து, 20, 21ம் தேதிகளில் சி.பி.எஸ்.இ., - மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு மட்டும், 22ம் தேதி அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் மாணவர்களுக்கு, 23ம் தேதி அரசு உதவி பெறும் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 24ம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கும் தேர்வு நடைபெறும். மாணவர்கள், தங்கள் அருகாமையில் உள்ள தேர்வு மையங்களில் கலந்துகொள்ளலாம். தேர்வு எழுதவரும் மாணவ, மாணவியர், கட்டாயம் மொபைல் போன் கொண்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்