குடிமங்கலம்;வி.ஏ.ஓ., அலுவலக கட்டடங்கள், பராமரிப்பின்றி தள்ளாடி வருவதால், மக்களும், அலுவலர்களும் அச்சத்துடன் அங்கு செல்ல வேண்டியுள்ளது; கட்டடங்களை புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை தாலுகாவுக்குட்பட்ட, பெதப்பம்பட்டி, குடிமங்கலம் வருவாய் உள்வட்டங்களில், 20க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. பெரும்பாலான கிராமங்களின் வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு நிரந்தர கட்டடங்கள் இல்லை.இதனால், ஒன்றிய நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள, கட்டடங்களில், வி.ஏ.ஓ., அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கிராமங்களின் நிர்வாகத்துக்கு முக்கிய ஆதாரமான, இந்த அலுவலக கட்டடங்கள் போதிய பராமரிப்பின்றி, பரிதாப நிலையில் உள்ளது.உதாரணமாக, பெதப்பம்பட்டி உள்வட்டம், விருகல்பட்டி கிராம வி.ஏ.ஓ., அலுவலகம் மரிக்கந்தையில் செயல்பட்டு வருகிறது.இந்த கட்டடத்தின் மேற்கூரை சிதிலமடைந்து, ஆங்காங்கே கான்கிரீட் பூச்சு உதிர்ந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இதே நிலையில் தான் கட்டடம் உள்ளது. அனிக்கடவு வருவாய் கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டடம், ஊராட்சி அலுவலக வளாகத்தில் உள்ளது.இந்த அலுவலக கட்டடமும், போதிய பராமரிப்பின்றி, மேற்பகுதியில் விரிசல் விட்டு காணப்படுகிறது. குடிமங்கலம், பெதப்பம்பட்டி உள்வட்டத்திலுள்ள பெரும்பாலான வி.ஏ.ஓ., அலுவலகங்கள் பராமரிப்பின்றியே உள்ளது.கிராமங்களின் முக்கிய ஆவணங்கள் வைக்கப்படும் இந்த கட்டடங்களில், மழைக்காலத்தில், பல்வேறு சிரமங்களை, மக்களும் அலுவலர்களும் சந்தித்து வருகின்றனர்.எனவே, வி.ஏ.ஓ., அலுவலக கட்டடங்களை புதுப்பிக்க, ஊரக வளர்ச்சி முகமை அல்லது வருவாய்த்துறை நிதி திட்டங்களின் கீழ், புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.