உடுமலை: உடுமலை கொங்கல்நகரத்தில், அகழ்வாராய்ச்சி செய்ய, தொல்லியல் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற தமிழக அரசு அறிவிப்புக்கு, வரலாற்று ஆய்வாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள கொங்கல்நகரம் கிராமத்திலுள்ள விளைநிலத்தில், 20 அடிக்கும் அதிகமான உயரத்தில், நெடுகல் எனப்படும் பெருங்கற்கால சின்னம் உள்ளது.இதே போல், சுற்றுப்பகுதியிலுள்ள சோமவாரப்பட்டி, அம்மாபட்டி உள்ளிட்ட இடங்களில், ஏராளமான தொன்மையான வளமைக்குறியீடுகள் உள்ளன.வரலாற்று ஆய்வாளர்களால், மேற்பரப்பு ஆய்வில், ஏறத்தாழ, 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய, ஏராளமான வரலாற்றுச்சான்றுகள் கண்டறியப்பட்டது.பெருங்கற்காலத்தைச்சேர்ந்த கல்திட்டை கல் பதுக்கைகள் நெடுங்கற்கள், முதுமக்கள் தாழி என பழங்கால வரலாற்றுச்சான்றுகள் அப்பகுதியில் அதிகளவு உள்ளது.மேலும், மேற்பரப்பு ஆய்வில், பழங்கால சங்கு வளையங்கள், 30க்கும் மேற்பட்ட வண்ண மற்றும் பல வடிவங்களில் பட்டை தீட்டப்பட்ட கல் மணிகள் கிடைத்தது.சோமவாரபட்டியில், 'பிராமி' எழுத்து பொறிக்கப்பட்ட மண் பாண்ட துண்டு, சில ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டது.முக்கியத்துவம் வாய்ந்த பெருங்கற்கால சின்னங்களை பாதுகாக்கவும், அப்பகுதியின் வரலாற்றை வெளிப்படுத்தவும், அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என, நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், தமிழக அரசுக்கு கோரிக்கை மனுவும் அனுப்பினர். இதையடுத்து, கொங்கல்நகரத்தில், அகழ்வாராய்ச்சி செய்ய, தொல்லியல்துறைக்கு நிதி ஒதுக்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அறிவிப்புக்கு வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த அகழ்வாராய்ச்சியால், பண்டைய கால வாழ்க்கை முறை வெளிப்படுவதுடன் வரலாற்று சின்னங்களையும் பாதுகாக்க முடியும்.