உடுமலை: 'சுத்தமாகவும், சுகாதாரமான முறையில் பழச்சாறு தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்; விதிமீறினால் நடவடிக்கை பாயும்,' என, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியிருப்பதாவது:பழச்சாறு உள்ளிட்ட கோடையில் தாகம் தீர்க்கும் உணவுப்பொருட்களை வாங்கி பயன்படுத்தும்போது, அவை சுத்தமாக, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதா என பார்த்து வாங்கவேண்டும்.பேக்கிங் செய்யப்பட்ட குளிர் பானங்கள், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருளில், பொருளின் பெயர், தயாரிப்பு, காலாவதி தேதி, ஊட்டச்சத்து, உணவு பாதுகாப்புத்துறை வழங்கிய உரிம எண் உள்ளிட்ட முழு விபரங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும்.திறந்த நிலையில், ஈ, கொசு மொய்க்கும் உணவு பதார்த்தங்களை வாங்கக்கூடாது. உணவுப்பொருள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை மட்டுமே வாங்கி, விற்பனை செய்யவேண்டும்.பழங்களை பூச்சி, ஈக்கள் மொய்க்காதவாறு, சுத்தமாகவும், சுகாதாரமாக சேமித்து வைத்து, விற்பனை செய்ய வேண்டும்.பழச்சாறுகளில் செயற்கை நிறமிகள் கலக்கக்கூடாது. பழச்சாறு தயாரிக்க சுத்தமான தண்ணீர் மற்றும் ஐஸ்கட்டிகளை பயன்படுத்த வேண்டும்.உணவுப்பொருள் கையாளும் பணியாளர்கள், தன் சுத்தம் பேணவேண்டும். கையுறை, தலையுறை அணிந்திருக்கவேண்டும்.விதிமீறும் வர்த்தகர்கள் மீது, உணவு பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். உணவு சம்பந்தமான புகார்களை, 94440 42322 என்கிற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.