திருப்பூர்: பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட, முதலிபாளையம் கிராம மக்கள், விவசாயிகள் 150 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்திடம் சரியான திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் இல்லை. இதனால், 60 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், ஆங்காங்கே உள்ள பாறைக்குழிகளிலேயே கொட்டப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக முதலிபாளையத்திலுள்ள பாறைக்குழியில் குப்பை கொட்டிதால், சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர் மிக மோசமாக மாசடைந்துள்ளது. அதனால், முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்களும், விவசாயிகளும் இணைந்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டவதற்கு, ஐகோர்ட் இடைக்கால தடையும் விதித்துள்ளது. இந்நிலையில், அதே முதலிபாளையம் கிராமத்தில், 17 ஏக்கர் பரப்பளவிலான மற்றொரு பாறைக்குழியை விலைக்கு வாங்கி, குப்பை கொட்டுவதற்கான நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் வேகம்காட்டி வருகிறது. பாறைக்குழிகளில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சரியான திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை கையாள வலியுறுத்தியும், முதலிபாளையம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு சார்பில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று, மாநகராட்சி அலுவலகம் முன், போலீசார் குவிக்கப்பட்னர். குடியேறும் போராட்டத்துக்காக, முதலிபாளைம் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட கிராம மக்கள், விவசாயிகள், தனித்தனி குழுக்களாக பிரிந்து, டூவீலர்களில், மாநகராட்சி அலுவலகம் முன் வந்து சேர்ந்தனர். குப்பை கொட்டியதால் விஷமாக மாறிய அடர் கருப்பு நிற தண்ணீர் பாட்டில் மற்றும் பாய், தலையணையுடன் வந்த பொதுமக்கள், ரோட்டில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மட்டுமின்றி, ஆங்காங்கே கடைகளில் நின்று கொண்டிருந்தவர்களையும், போலீசார் வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து, கைது செய்து, வேன் மற்றும் பஸ்ஸில் ஏற்றினர். 'திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், பாறைக்குழியில் குப்பை கொட்டி, எங்கள் பகுதியில் நிலத்தடி நீரையும்; மண்ணையும் விஷத்தன்மையாக்கிவிட்டது. இதனை கண்டித்து போராடுவதற்கு கூட எங்களுக்கு அனுமதி இல்லையா' என கேள்வி எழுப்பிய முதலிபாளையம் கிராம மக்கள், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வேன் மற்றும் பஸ்க்குள் ஏற மறுத்தனர். இதனால், பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும், 90 பெண்கள் உட்பட 150 பேர் கைது செய்யப்பட்டு, குஜராத்தி திருமண மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு, வேனிலிருந்து இறங்க மறுத்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தால், மாநகராட்சி அலுவலக பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது; ஒருமணி நேரம் வரை, மங்கலம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் வாக்குவாதம் மாநகராட்சி அலுவலகம் முன் நடந்த குடியேறும் போராட்டம் நிகழ்வுகள் தொடர்பாக, பத்திரிகை நிருபர்கள், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். கைது செய்யப்பட்ட வேனில் அமர்ந்திருந்த விவசாய சங்க பிரதிநிதிகள், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். இதனை பார்த்த போலீசார், 'எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட பின், பேட்டி எடுக்க கூடாது என கூறி, தடுத்தனர். இதனால், பத்திரிகையாளர்களுக்கும் - போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள், 'போலீசார், பத்திரிகை சுதந்திரத்தையும் பறிக்கின்றனர்' என கோஷமிட்டனர். உண்ணாவிரதம்முதலிபாளையம் கிராம மக்கள், வேனில் ஏற்றப்பட்டு, குஜராத்தி திருமண மண்டபத்துக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு, வேனிலிருந்து இறக்க மறுத்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார், வலுக்கட்டாயமாக இழுத்து, வெளியேற்றி, மண்டபத்தில் அடைத்தனர். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. ஆனால், மாநகராட்சி கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என கூறி, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். 'திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், பாறைக்குழியில் குப்பை கொட்டி, எங்கள் பகுதியில் நிலத்தடி நீரையும்; மண்ணையும் விஷத்தன்மையாக்கிவிட்டது. இதனை கண்டித்து போராடுவதற்கு கூட எங்களுக்கு அனுமதி இல்லையா' என கேள்வி எழுப்பிய முதலிபாளையம் கிராம மக்கள், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் போராட்டம் தீவிரமாகும் குப்பைகளை முதலிபாளையம் பாறைக்குழியில் கொட்டியதால், பாறைக்குழி மட்டுமின்றி சுற்றுப்பகுதிகளிலும் நிலத்தடி நீர், மண் மிக கடுமையாக மாசடைந்துள்ளது. பாறைக்குழியில் நீர், 1.20 லட்சம் டி.டி.எஸ், ஆக உள்ளது. பாறைக்குழியிலிருந்து ஒரு கி.மீ. சுற்றுப்பகுதிகளில், டி.டி.எஸ். 82 ஆயிரமாக உள்ளது. மண் வளமும் குன்றி, மிக மோசான நிலையில் மாசுபட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகமோ, குப்பைகளை கையாள அறிவியல் பூர்வமான திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்துவதைவிட்டுவிட்டு, மீண்டும்மீண்டும் பாறைக்குழிகளிலேயே கொட்டுவதற்கு முயற்சிக்கிறது. இதற்கு எதிராக போராடும் மக்களை, போலீசாரை பயன்படுத்தி அடக்கு முறைகளை வாயிலாக தடுக்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம், பாறைக்குழிகளில் குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும். சரியான திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மருத்துவ முகாம் நடத்தி, முதலிபாளையம் சுற்றுப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ள உடல் நல பாதிப்புகளை குணப்படுத்த வேண்டும். மீண்டும் மீண்டும் பாறைக்குழியில் குப்பை கொட்டும் திட்டத்தையே மாநகராட்சி நிர்வாகம் கையிலெடுக்குமானால், எங்கள் இன்னும் தீவிரமான போராட்டங்கள் நடத்தப்படும். - வேலுசாமி முதலிபாளையம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ண