திருப்பூர்: 'குப்பையில்லாத திருப்பூர்' ஆக மாற்ற, 60 நாள் இலக்குடன் களமிறங்கியுள்ளது, திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம். திருப்பூரில் சேகரமாகும் குப்பை கழிவுகள் அகற்றுவது அதை திடக்கழிவு மேலாண்மையில் கையாளுவது பெரும் சவாலாக மாறியுள்ளது. திடக்கழிவு மேலாண்மையில் வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது அமலாகியுள்ளன. பணிகளை ஆய்வு செய்த மேயர் தினேஷ்குமார் கூறியதாவது: நெறிமுறைகள் அமல்படுத்திய நிலையில், சுகாதார பிரிவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நகரில் உள்ள, 500 இறைச்சி கடைகளுக்கு உரிய விழிப்புணர்வு, நடைமுறை விவரங்களை விளக்கி சுற்றறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில், 13 டன் இறைச்சி கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. உலர் கழிவு முதல் நாளில், 4 டன் பெறப்பட்டுள்ளது. தினமும், 100 டன் வரை பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிக்ஸ்ட் வேஸ்ட் எனப்படும் கலவையான கழிவுகளை பிரிக்கும் இயந்திரம் தருவிக்கப்படவுள்ளது. ஒத்துழைப்பு அவசியம் தனியார் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் சார்பில், 10 நுண்ணுரம் தயாரிப்பு மையங்கள் தத்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் ஆர்வம் உள்ள அமைப்பினர், தொழில் நிறுவனங்கள் முன் வந்தால் வரவேற்கிறோம். திடக்கழிவு மேலாண்மையில் மக்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். ஆலோசனைகள் வழங்கவும், நெறிமுறைகளை நடைமுறைப்படுத்தவும் தன்னார்வலர்கள் முன்வர வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் அதை ஏற்று இணைந்து செயல்படத் தயாராக உள்ளது. கோர்ட் உத்தரவையடுத்து மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆய்வு செய்ததில் செயல்படும் நிலையில், 20 நுண்ணுர மையங்கள் உள்ளன. அவற்றில் இரு மையங்களில் மட்டும் மோட்டார் மாற்றப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கூடுதலாக, 10 எண்ணிக்கையில் அதிக திறன் கொண்ட இயந்திரங்கள் தருவிக்கப்படவுள்ளன. திருமண மண்டபம் போன்ற நிகழ்வுகளில் சேகரமாகும் கழிவுகளை அதே இடத்தில் பிரித்து வழங்குவது குறித்து மண்டப நிர்வாகிகள், கேட்டரிங் நிறுவனங்களுக்கு உரிய ஆலோசனை வழங்கி செயல்படுத்தப்படும். இறைச்சி கழிவுகள், ஈரக்கழிவுகள், மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் சேரமாகும் இடத்திலேயே பிரித்து பெறப்படும். அவ்வகையில், 300 முதல், 400 மெட்ரிக் டன் அளவிலான கழிவுகள் வெளியே எங்கும் செல்லாத வகையில் நேரடியாக பெற்று கையாளப்படும். அதிக கழிவுகள் உருவாகும் தொழில் நிறுவனங்களில், கழிவுகள் துாய்மைப்பணியாளர்களிடம் நேரடியாக வழங்கும் வகையில், அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மண்டல வாரியாக இதற்கு பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொழில் நிறுவனங்கள் அவர்களைத் தொடர்பு கொண்டு நேரடியாக கழிவுகளை ஒப்படைக்கலாம். வாகனங்கள் ஒதுக்கீடு மண்டல வாரியாக இதற் கான வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது போல் முறையாக கழிவுகளை ஒப்படைக்கும் நிறுவனங்களை சிறப்பிக்கும் வகையிலும், மற்றவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் கவுரவப்படுத்தப்படும் திட்டம் உள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் மூலம், 60 நாட் கள் இலக்கு நிர்ணயித்து பணிகள் துவங்கியுள்ளன. இந்த இலக்கிற் குள் நகரில் எங்கும் குப்பை இல்லாத துாய்மையான நகரமாக மாற்றப்படும். அனைத்து தரப்பினரும் இதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் கழிவுகளை மாநகராட்சி சுகாதார பிரிவினர் நேரடியாக பெற்று கொள்ள உள்ளனர். இதற்காக, மண்டலம் வாரியாக,தலா, ஒரு லாரி ஒதுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்கள், தங்களிடம் சேகரமாகும் கழிவுகளை தரம் பிரித்து வைத்து வழங்க வேண்டும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது. மண்டலம் வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்; தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: முதல்மண்டலம் - 96004-22660(பரமசிவம்), இரண்டாவது - 82200-50467 (ராமகிருஷ்ணன்), மூன்றாவது - 94452-61016 (ராமகிருஷ்ணன்), நான்காவது - 90477-86388 (ராதாகிருஷ்ணன்).