| ADDED : நவ 22, 2025 05:59 AM
பல்லடம்: பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சி, உப்பிலிபாளையம் செல்லும் ரோட்டில் உள்ள ஊராட்சி குப்பை கிடங்குக்கு, மர்ம நபர்கள்தீ வைத்தனர். இதனால், குப்பை கிடங்கு கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது: கரைப்புதுார், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி எல்லைப் பகுதியில் அமைந்துள்ள குப்பை கிடங்கால், சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருகிறோம். மிக அருகிலேயே, நுாற்றுக்கணக்கான வீடுகள், அரசு தனியார், பள்ளிகள், பனியன் நிறுவனங்கள், கோவில் உள்ளன. இப்பகுதியில் மலைக்குன்று போல் குவிக்கப்பட்டுள்ள குப்பையால், கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த குப்பை கிடங்கால், கடும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. யாரோ சிலர் குப்பைகளுக்கு தீ வைத்ததால், கடும் புகைமூட்டம் கிளம்பியது. இதனால், நோய் தொற்று அபாயம் ஏற்பட்டு வருகிறது. எப்படி இங்கு வாழ்வது என்றே தெரியவில்லை. நாளை (இன்று) குப்பைகளை எடுத்து வந்து ரோட்டில் கொட்டி போராடுவோம். கைது செய்தாலும் பரவாயில்லை. இதற்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். முன்னதாக, பல்லடம் தீயணைப்பு துறையினர், கரைப்புதுாருக்கு சென்று குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.