| ADDED : நவ 23, 2025 07:04 AM
அவிநாசி: ஆட்டையாம்பாளையத்தில் உயர் மின்னழுத்த மின்பாதை மறு சீரமைப்பு திட்டத்தில்,சேவைப் பணிகள் துவங்க பூமி பூஜை நடைபெற்றது. திருப்பூர் மின் பகிர்மான வட்டம், அவிநாசி கோட்டம், வடக்கு அவிநாசி உபகோட்டம், மேற்கு அவிநாசி பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட அவிநாசி அடுத்த கோவை ரோட்டில் ஆட்டையாம்பாளையத்தில் உயர் மின் அழுத்த மின்பாதை மறு சீரமைப்பு திட்டத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் சேவைப் பணிகள் துவங்க பூமி பூஜை நடைபெற்றது. இதில் முதல் கட்டமாக உப்பிலிபாளையம் ஊராட்சியில் 64 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும்; சில்லிக்கல் எஸ்.எஸ்.பீடரில் 18 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பிலும் துவங்கப்பட்டது. திருப்பூர் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் சுமதி கூறுகையில், 'இந்த மறுசீரமைப்பு மின் பகிர்மான திட்டத்தின் சிறப்பு பயன்களால் இரண்டு மின்மாற்றி ஒரே இடத்தில் இருப்பதைப் பிரித்து தனித்தனியாக வெவ்வேறு இடத்தில் அமைத்து அதனுடைய மின்பாதை துாரத்தை குறைக்க முடியும். பயனாளர்களுக்கு அதிக மின் தடை ஏற்படாமல் இருப்பதற்காக இந்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது' என்றார். கோட்ட பொறியாளர் (பொறுப்பு) சந்திரசேகர் தலைமை தாங்கினார். உதவிக்கோட்ட பொறியாளர் நந்தகுமார், உதவி மின் பொறியாளர்கள் செந்தில்குமார்,இசக்கிமுத்து, ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.