நாய்த்தொல்லை
மடத்துக்குளம் அருகே, சாமராய்பட்டி, கொமரலிங்கம், கொழுமம் ஆகிய பகுதிகளில் நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. பகல், இரவு நேரங்களில் வாகனங்களும் பொது மக்களுக்கும் இடையூறாக உள்ளது. குழந்தைகளை துரத்துகிறது. நாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சந்திரசேகர், உடுமலை. பள்ளத்தை சரிசெய்யணும்
உடுமலை பஸ் ஸ்டாண்டில் கோவை செல்லும் பஸ்கள் நுழையுமிடத்தில் பள்ளம் காணப்படுகிறது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் திணறுகின்றன. மக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நகராட்சியினர் இந்த பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.- முருகன், உடுமலை. புகையால் அவதி
உடுமலை, சர்தார் வீதி எக்ஸ்டன்சன் பகுதியில் குப்பைக்கழிவுகளை தீ வைத்து எரிக்கின்றனர். அப்பகுதி வழியாக செல்ல முடியாமல் புகை அதிகமாக பரவுகிறது. வாகன ஓட்டுநர்கள் சுவாச பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். குப்பையை எரிப்போர் மீது நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜெயந்தி, உடுமலை. பராமரிக்க வேண்டும்
உடுமலை பஸ் ஸ்டாண்ட் எதிரில், ராஜேந்திரா ரோடு துவக்கத்தில் நகராட்சி நினைவு ஸ்துாபி உள்ளது. இது பராமரிப்பு இல்லாததால், செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. எனவே, நகராட்சியினர் இதை பராமரித்து அழகுபடுத்த வேண்டும்.- ராஜா, உடுமலை. பள்ளி முன் அவலம்
உடுமலை, ராஜேந்திரா ரோடு அரசு பள்ளியின் சுற்றுசுவரை திறந்த வெளிக்கழிப்பிடமாகவே மாற்றியுள்ளனர். அப்பள்ளி மாணவர்கள் மிகுதியான துர்நாற்றத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளது. தொடர்ந்து அவ்விடம் கழிப்பிடமாக மாற்றப்பட்டு வருவதால், பள்ளி வளாகமும் துர்நாற்றம் வீச துவங்கிவிட்டது. மாணவர்களும் முகம் சுழிக்கின்றனர்.- ராகவன், உடுமலை. போக்குவரத்து நெரிசல்
உடுமலை, தளி ரோட்டில் வாகனங்கள் விதிமுறை மீறி பல இடங்களில் நிறுத்தப்படுகின்றன. இதனால் மாலை நேரங்களில், தொடர்ந்து தளிரோடு சிக்னல் முதல் குட்டைதிடல் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்கள் ரோட்டை கடப்பதற்கும் முடியாமல் சிக்கலான நிலை தொடர்கிறது.- விஜயன், உடுமலை. கழிவுநீர் தேக்கம்
உடுமலை, மினி மார்க்கெட் பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே சாக்கடை குழி மூடப்படாமல் உள்ளது. இதில் குப்பைக்கழிவுகள் கொட்டப்படுவதுடன், கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. ரேஷன் பொருட்கள் பெற வரும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர்.- ராமகிருஷ்ணன், உடுமலை. ரோட்டோரத்தில் புதர்
பொள்ளாச்சி, ஆர்.ஆர்., தியேட்டர் ரோட்டின் ஓரத்தில் அதிகளவு புதர் முளைத்துள்ளது. இதனால், இப்பகுதியில் கொசு உற்பத்தியும் அதிகம் உள்ளது. மேலும், துர்நாற்றம் வீசுவதால், இதை துாய்மை பணியாளர்கள் கவனித்து உடனடியாக புதரை அகற்றவேண்டும்.- -ரஞ்சித், பொள்ளாச்சி. பஸ் ஸ்டாண்ட் விரிவுபடுதப்படுமா
வால்பாறை, காந்தி சிலை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பயணியர் நிற்கவும், அமரவும் இடப்பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், ரோட்டில் நிற்கின்றனர். இதை நகராட்சி நிர்வாகம் கவனித்து பயணியர் நலன் கருதி, பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -ராஜா, வால்பாறை. மக்கள் அச்சம்
வால்பாறை நகரில் தெருநாய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால், மாலை நேரத்தில் பொதுமக்கள் தெருக்களில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். ரோட்டில் செல்வோரை தெருநாய்கள் விரட்டுவதால் விபத்து ஏற்படுகிறது. தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -அரசன், வால்பாறை. நிழற்கூரை அருகே குப்பை
கிணத்துக்கடவு, கோதவாடி செல்லும் ரோட்டில் கோடங்கிபாளையம் இணைப்பு ரோடு அருகே உள்ள நிழற்கூரை பின்பக்கம் அதிகளவு குப்பை, காலி மதுப்பாட்டில்கள் போன்றவைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால், பொதுச்சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை தவிர்க்க, ஊராட்சி சார்பில் குப்பை தொட்டி வைக்க வேண்டும்.-- -கார்த்தி, கிணத்துக்கடவு. கழிவு லாரிகளால் இடையூறு
பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், நகராட்சி அலுவலகம் அருகில் செப்டிக்டேங்க் கழிவு அகற்றும் லாரிகள் வரிசையாக அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் ஒதுங்கி செல்வதற்கு சிரமமாக உள்ளது. கழிவு அகற்றும் லாரிகளை அந்த இடத்தில் நிறுத்துவதற்கு தடை விதித்து, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் மாற்று இடம் ஒதுக்க வேண்டும்.- ரவிச்சந்திரன், பொள்ளாச்சி. குப்பை எரிப்பு
கிணத்துக்கடவு, அண்ணாநகர் - கம்பன் வீதியில், ரோட்டோரத்தில் அதிகளவு குப்பை கொட்டப்பட்டு பேரூராட்சி துாய்மை பணியாளர்கள் தீ வைத்து எரிக்கின்றனர். இப்பகுதியில், அதிகளவு குடியிருப்புகள் உள்ளதால், வீடுகளை புகை சூழ்ந்து விடுகிறது. இதனால் குடியிருப்புகளில் உள்ளவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, குப்பை கொட்டுவதை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- -சந்தோஷ், கிணத்துக்கடவு.