| ADDED : நவ 22, 2025 05:58 AM
திருப்பூர்: திருப்பூர் கோர்ட் வீதியில் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுவதால் கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இந்த ரோட்டில் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாநகர போலீஸ் குடியிருப்பு, பல்வேறு வங்கிகள், தனியார் வணிக வளாகங்கள் உள்ளன. ராஜா ராவ் வீதி, சபா பதிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், டி.எம்.எப். பாலம் வழியாக ஊத்துக்குளி ரோடு, லட்சுமிநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்லும் முக்கிய ரோடாக இது உள்ளது. கடந்த, 3 ஆண்டு முன் இந்த ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த ரோட்டில் இருந்த கோர்ட்கள் அனைத்தும் பல்லடம் ரோட்டுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு விட்டது. இருப்பினும், பிஸியான அந்த ரோட்டில், உள்ள கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு வருவோர் தங்கள் வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்திச் சென்று விடுகின்றனர். இதுதவிர, குமரன் ரோட்டிலிருந்து பிரியும் இடத்திலும் ரோட்டின் இரு புறங்களிலும் வாகனங்களை பார்க்கிங் செய்கின்றனர். இதனால், மற்ற வாகனங்கள் செல்வதில் பெரும் இடையூறும், அவதியும் நிலவுகிறது. இந்த ரோடு பெரும்பாலும் வாகன நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகும் நிலை காணப் படுகிறது. எனவே, வாகனங்கள் பார்க்கிங்கில் செய்வது ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.