| ADDED : நவ 23, 2025 06:48 AM
திருப்பூர்: தாராபுரத்தில் கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக 'நற்சூழல்' என்னும் அமைப்பு புதிதாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தாராபுரத்தில் புதிதாக குப்பை மேலாண்மை அமைப்பு உருவாக்க திட்டமிட்டப்பட்டது. இதன் உறுப்பினர் சாந்தி கூறியதாவது: நாங்கள் இயற்கை விவசாயம் செய்து, இயற்கை பொருட்கள் விற்பனை செய்தும் வருகிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள் ஆயிரம் பேர் இருப்பர். இயற்கை பொருள் தேடி வருவோரிடம் இயற்கை பாதுகாப்பு சார்ந்த சிந்தனைகள் இருக்கும். அவர்களிடம் பேசினோம். குப்பை மேலாண்மைக்கு என்று ஒரு அமைப்பு வேண்டும் என்பதற்காக சிறு முயற்சியாக இந்த 'நற்சூழல்' அமைகிறது. இயற்கை விவசாயம் செய்பவர்கள், எங்கள் வாடிக்கையாளர்கள் என்று ஆறு பேர் சேர்ந்து துவங்கியுள்ளோம். தாராபுரத்தில் சில இடங்களில் குப்பை சரியாக வாங்கப்படாததால் மக்கள் பொது இடங்களில் குப்பை கொட்டுகின்றனர். கொட்டும் குப்பையால் நிலம் மாசுபடுவதால் மறுசுழற்சி அவசியமாகிறது. பொது மக்களிடம் அறிவுறுத்தினால் தரம்பிரித்து வைப்பர். அதனை சேகரித்து மறுசுழற்சி செய்யலாம். மக்களிடம் அனைத்து வகை குப்பைகளும் வாங்க வேண்டும். நேற்று திருப்பூரில் உள்ள குப்பை மேலாண்மை அமைப்பினரிடம் சென்று ஆலோசனை பெற்றோம். பள்ளிகளில் விழிப்புணர்வு செய்து சேகரித்தல், அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு பைகள் கொடுத்து குப்பை தரம்பிரித்து போடும்படி அறிவுறுத்தி சேகரிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம். கழிவு மேலாண்மையோடு பிளாஸ்டிக் பயன்படுத்தாமை, துணிப்பை பயன்பாடு போன்ற குப்பையை ஒழிக்கும் இயக்கமாகவும் செயல்பட திட்டமிட்டுள்ளோம். பிளாஸ்டிக் புழக்கத்தை வைத்துக்கொண்டு குப்பை மேலாண்மை செய்வதை காட்டிலும், அதன் பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும்.