உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  குறை கேட்க நேரமில்லையா? விவசாயிகள் கடும் கண்டனம்

 குறை கேட்க நேரமில்லையா? விவசாயிகள் கடும் கண்டனம்

திருப்பூர்: விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தாத மாவட்ட நிர்வாகத்துக்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, விவசாயிகள் பாதுகாப்பு சங்க திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ் அறிக்கை: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் கடந்த, 5 மாதமாக விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தை முறையாக நடத்தவில்லை. இது கடும் கண்டனத்துக்குரியது. இரு மாதமாக ஏதோ ஒரு காரணம் கூறி கூட்டம் நடத்தாமல் விட்டு விட்டனர். இதுவரை விவசாயிகள் குறைகளை தீர்க்காவிட்டாலும், குறைகளை கேட்கவாவது செய்தனர். தற்போது அதற்கும் கூட மாவட்ட நிர்வாகத்துக்கு நேரமில்லாமல் போய் விட்டது. திருப்பூர் மாவட்டத்தில் இனாம் நில பிரச்னை, காஸ் குழாய் பதிப்பு பிரச்னை, உயர் மின் கோபுரம் அமைக்கும் பிரச்னை, குப்பை கொட்டும் பிரச்னை, விதை, உரம் விற்பனை பிரச்னை என எண்ணற்ற பிரச்னைகள் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இவற்றை தீர்க்க முடியாமல் தான் மாவட்ட நிர்வாகம் விவசாயிகள் குறை தீர்ப்புகூட்டத்தைக் கூட நடத்தாமல் தள்ளிப் போடுவதாக சந்தேகம் எழுகிறது. மாதந்தோறும் நான்காம் வெள்ளிக்கிழமை வழக்கமான கூட்டம் நடத்தப்பட வேண்டும். இதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் கலெக்டர் அலுவலக அறையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்துவர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை