உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கூட்டம் கசந்தாலும் சொந்த ஊர் செல்வது இனிப்பல்லவா!

கூட்டம் கசந்தாலும் சொந்த ஊர் செல்வது இனிப்பல்லவா!

திருப்பூர்:திருப்பூரில் இருந்து, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் கூட்டம் அலைமோதியது.

மத்திய பஸ் ஸ்டாண்ட்

திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம் செல்லும் பஸ்களில் பயணிக்க கூட்டம் நிறைந்தது. பத்து நிமிடத்துக்கு ஒரு பஸ் இயக்கப்பட்டதால், பயணிகள் இருக்கைகளை உறுதி செய்து, பயணிக்க முடிந்தது.பொங்கலுக்கு தேவையான பொருட்கள், புத்தாடை வாங்க பலரும் நேற்று நகருக்குள் வந்து சென்றால், டவுன் பஸ், மினிபஸ்களில் கூட்டம் அதிகரித்திருந்தது. வழக்கத்தை விட முக்கிய சந்திப்புகளில் அதிகளவில் டூவீலர்கள் நெருக்கியடித்து பயணித்ததை காண முடிந்தது. சிலர் டூவீலரில் சொந்த ஊருக்கு பயணமாகினர்.

கோவில்வழி

இடவசதி போதிய அளவில் இருந்ததால், கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்டிருந்த மரத்தடுப்பு, தட்டிகளுக்கு அவசியம் இல்லாமல் அதிகாலையிலும் மதுரை, தேனிக்கு பஸ் இயக்கப்பட்டது.

புதிய பஸ் ஸ்டாண்ட்

புதிய பஸ் ஸ்டாண்ட் வரும் பயணிகளை ஒழுங்குபடுத்தி அனுப்ப ஏதுவாக, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், மரத்தடுப்பு, தட்டிகள் கட்டப்பட்டிருந்தது. அவற்றில் காத்திருந்த பயணிகளை போலீசார் ஒழுங்குபடுத்தினர். பலரும் காத்திருந்து பஸ் ஏறாமல், வரும் பஸ்களில் அப்படியே ஏறிக்கொள்ள, நுழைவு வாயில் முன் காத்திருந்தனர். பஸ்கள் அங்கு நிற்காமல் வந்ததால், ஏமாற்றம் அடைந்தனர். வந்த பஸ்களில் தங்களுக்கான இருக்கையை உறுதி செய்து கொள்ள முண்டியடித்து பஸ் ஏற பலரும் முயற்சித்தனர். அதிக லக்கேஜ், குழந்தைகளுடன் வந்தவர் சிரமத்துக்கு உள்ளாயினர். இரவு, 8:00 மணிக்கு பின் துவங்கிய கூட்டம், நள்ளிரவை தாண்டியும் தொடர்ந்ததால், வந்த பஸ்கள் ரேக்கில் நிறுத்தாமல், அப்படியே அனுப்பி வைக்கப்பட்டன.குறிப்பாக, இரவு, 9:00 மணி முதல், 11:00 மணி வரை ஒரே நேரத்தில், ஆயிரத்துக்கும் அதிகமாக பயணிகள் வந்ததால், இயக்கு குழுவினர், போலீசார் திணறி போயினர்.இருப்பினும், நேற்று காலை சற்று குறைந்த கூட்டம் மதியத்துக்கு பின் மெல்ல அதிகரித்தது.போக்குவரத்து அலுவலர்கள் கூறுகையில்,' தீபாவளி பண்டிகையின் போது ஒரே நாளில் சொந்த ஊர் செல்ல பலரும் பஸ் ஸ்டாண்ட் வருவர்.பொங்கல் நான்குநாட்கள் விடுமுறை என்பதால், நேற்று முன்தினம் காலை, இரவு, நேற்று என பயணிகள் சீரான இடைவெளியில் வந்ததால், அதற்கேற்ப சிறப்பு பஸ்களை ஓரளவு திட்டமிட்டு இயக்க முடிந்தது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி