| ADDED : ஜன 06, 2024 01:27 AM
திருப்பூர்;திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்திய நிறுவனம் திடீரென மூடப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த சீட்டு தொகை செலுத்தியவர்கள், போலீஸ் கமிஷனரிடம் நேற்று புகார் அளித்தனர்.திருப்பூர், அவிநாசி, பல்லடம் பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், நேற்று திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திரண்டு வந்து அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:திருப்பூர், மங்கலம் ரோடு, கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில் அருகே, ஈகிள் சக்தி சிட்ஸ், என்ற பெயரில் நிதி நிறுவனம் உள்ளது. இதில், திருப்பூர், அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்டோர், 1 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான மாதாந்திர ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வருகிறோம்.இந்நிறுவனத்துக்கு பல்லடம், அவிநாசி, மணப்பாறை உள்ளிட்ட பல ஊர்களில் கிளைகள் உள்ளது. சீட்டு சேர்ந்தவர்களுக்கு அது முதிர்வடைந்தும் பணம் தரவில்லை. இதுகுறித்து சீட்டு சேர்ந்தவர்கள், கடந்த 3ம் தேதி, நிறுவனத்துக்குச் சென்று பார்த்தபோது நிறுவனம் காலி செய்யப்பட்டது தெரிந்தது.விசாரித்த போது, மாவட்டத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு பல கோடி ரூபாய் வரை முதிர்வு பணம் தராமல் மோசடி செய்தது தெரிந்தது. இதில் ஈடுபட்ட நிறுவன உரிமையாளர் உள்ளிட்டோரை கண்டு பிடித்து நாங்கள் இழந்த பணத்தை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.இப்புகார் குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.