| ADDED : ஜன 30, 2024 12:09 AM
பல்லடம்;''தியானம் செய்வதால் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும்'' என, பல்லடத்தில் நடந்த 'யோக மகோத்சவம்' நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது.மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஹார்ட்புல்னெஸ் நிறுவனம் மற்றும் பல்லடம் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் இணைந்து யோகா மற்றும் தியான பயிற்சி, நேற்று முன்தினம் பல்லடத்தில் துவங்கியது. மூன்று நாட்கள் நடக்கும் இந்த இலவச பயிற்சி முகாமை, பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி துவக்கி வைத்தார்.வாழும் கலை அமைப்பு நிர்வாகி நடராஜன், தி.மு.க., நகர செயலாளர் ராஜேந்திர குமார், ஊராட்சித் தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், பாரதி சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஹார்ட்புல்னஸ் திருப்பூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் குப்தா பேசுகையில், 'தியானம், யோகா என்பது செய்தால்தான் தெரியவரும். இவற்றை சொல்லி புரிய வைக்க முடியாது. அனுபவித்தால் தான் தியானத்தின் அருமை புரியும். வாழ்க்கையில் தேவையான மாற்றம் ஏற்படும். மூன்று மாதம் தொடர்ந்து தியானம் செய்து பாருங்கள். நிச்சயம் தொழில் வளரும், வியாபாரம் பெருகும் என்பது மட்டுமன்றி நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் நூறு சதவீதம் வெற்றி கிடைக்கும் என்பதற்கு உறுதி தருகிறேன். இதை நீங்கள்தான் செய்ய வேண்டும். வேறு யாரையும் வைத்து செய்தால் பயனில்லை. தியானம் செய்ய உறுதியான மனம் வேண்டும். மாற்றம் உங்களுக்கு தெரியாது. ஆனால், உங்கள் மாற்றத்தை மற்றவர்கள் சொல்வார்கள்'' என்றார்.முன்னதாக, பல்லடம் தாலுகா ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம், தாராபுரம் தாலுகா ஒருங்கிணைப்பாளர் ரவி சுப்பையன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். தொடர்ந்து, யோகா மற்றும் தியானம் குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. பொதுமக்கள் பலரும் பங்கேற்று பயனடைந்தனர்.