| ADDED : பிப் 22, 2024 05:41 AM
பல்லடம்: பல்லடம் அருகே, அரசு பஸ் ஒன்று நடு ரோட்டில் பழுதாகி நின்றதன் காரணமாக, பயணிகள் பரிதவித்ததுடன், வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.திருப்பூரில் இருந்து சின்னக்கரை, கரைப்புதுார், ஆறுமுத்தாம்பாளையம், அறிவொளி நகர் வழியாக பல்லடம் வரை அரசு டவுன் பஸ் (22பி) இயக்கப்படுகிறது.நேற்று மாலை இந்த பஸ் பயணிகளுடன் திருப்பூரில் இருந்து பல்லடம் நோக்கி வந்துகொண்டிருந்தது. ஆறுமுத்தாம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி அருகே வரும் போது, பஸ் திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்றது.தொடர்ந்து, பஸ்சை அங்கிருந்து நகர்த்த முடியவில்லை. குறுகலான வழித்தடம் என்பதால், இரு சக்கர வாகனங்களை தவிர்த்து, நான்கு சக்கர வாகனங்கள் இவ்வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மாற்று வழித்தடம் பயன்படுத்தி வாகனங்கள் சென்றன.இதற்கிடையே, பஸ்சுக்குள் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டனர். நடுவழியில் இறங்கிய பயணிகளில் பலர் வேறுவழியின்றி நடைபயணமாக புறப்பட, சிலர், இருசக்கர வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டும்,மேலும் சிலர் பஸ் ஸ்டாப்பிலும் காத்திருந்தனர். தொடர்ந்து, பஸ் டிரைவர் மற்றும் நடத்துனர், பஸ்சை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.நடுவழியில் அரசு பஸ் பழுதாகி நின்றதால், பஸ்சில் பயணித்த பயணிகள் மட்டுமின்றி, வழித்தடத்தில் சென்ற வாகன ஓட்டிகளும் சிரமத்துக்கு ஆளாகினர்.