திருப்பூர்: தீவிர திருத்தம் முடிந்தநிலையில், ஜனவரி 1 ம் தேதியை தகுதிநாளாக கொண்டு, புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான சுருக்கமுறை திருத்த பணிகள் நடைபெற்றுவருகின்றன. பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், பெயர், முகவரி, மொபைல் எண் உள்பட அனைத்துவகை திருத்தத்துக்கான படிவங்கள் பிரின்ட் செய்யப்பட்டு, போதுமான எண்ணிக்கையில் பி.எல்.ஓ.,க்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 1ல், 18 வயது பூர்த்தியாகும் இளம் வாக்காளர்கள் மற்றும் பட்டியலில் பெயர் இடம்பெறாதோர், பி.எல்.ஓ.க்களிடமிருந்து நேரடியாகவும், https://voters.eci.gov.in/ என்கிற தளத்தில் ஆன்லைனிலும் படிவம் பூர்த்தி செய்து சமர்ப்பித்துவருகின்றனர். திருத்தங்களுக்காக படிவம் - 8; பெயர் நீக்கத்துக்காக படிவம் - 7 வழங்கப்பட்டு, பூர்த்தி செய்து பெறப்பட்டுவருகிறது. வாக்காளர் வசதிக்காக, அந்தந்த ஓட்டுச்சாவடிகளில், இம்மாதம் நேற்றுமுன்தினம், நேற்றும்; ஜனவரியில் 3, 4 தேதிகள் ஆகிய நான்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. காலை, 9:30 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடைபெறும் இம்முகாம்களில், வாக்களர்கள் பங்கேற்று, படிவங்கள் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்து வழங்கிவருகின்றனர். வரைவு பட்டியல் வெளியான 19ம் தேதி முதல், நேற்று முன்தினம் (27 ம் தேதி) வரையிலான ஒன்பது நாட்களில், நேரடியாக மொத்தம் ஏழாயிரம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டுள்ளன. இவற்றில், திருத்தத்துக்காக 500; பெயர் சேர்த்தலுக்கானவை 6500. நேற்றுமுன்தினம் நடைபெற்ற சிறப்பு முகாம் வாயிலாக மட்டும், 2500 படிவங்கள் பெறப்பட்டுள்ளன. இரண்டாவது நாளான நேற்றும், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் காலை முதல் மாலை வரை, சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, வாக்காளர்களிடமிருந்து படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டன.