திருப்பூர்;தாராபுரத்தில் நகராட்சி தலைவருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, ஆளுங்கட்சி கவுன் சிலருக்கு, கமிஷனர் நோட்டீஸ் அளித்த விவகாரம், தி.மு.க., வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தாராபுரம் நகராட்சி, 30 வார்டுகளை கொண்டுள்ளது. இதில், தி.மு.க., 25 வார்டு, அ.தி.மு.க., - 3, காங், பா.ஜ., தலா, ஒரு வார்டை தங்கள் வசம் வைத்துள்ளது. தலைவராக தி.மு.க., வை சேர்ந்த பாப்புகண்ணன் உள்ளார்.கடந்த சில மாதங்களாக, வார்டு பகுதியில் எவ்வித வேலையும் நடக்கவில்லை. அதிகாரிகளிடம் தெரிவித்தால் அலட்சியமாக இருக்கின்றனர்.வார்டு பிரச்னை குறித்து அதிகாரி, நகராட்சி தலைவர் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஆளும்கட்சி கவுன்சிலர் மத்தியில் உள்ளது.நகராட்சி நிர்வாகம் மீது உள்ள அதிருப்தியை தெரியப்படுத்தும் வகையில், கடந்த மாதம் நடந்த நகராட்சி கூட்டத்தில் இருந்து ஆளும்கட்சி கவுன்சிலர்கள், பத்துக்கும் மேற்பட்டோர் வெளிநடப்பு செய்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.முன்னாள் எம்.எல்.ஏ., வும், தற்போதைய, 15வது வார்டு கவுன்சிலருமான சரஸ்வதி, ''கடந்த, ஒன்றரை ஆண்டுகளாக வார்டுக்குள் குப்பை எடுப்பதில் ஆரம்பித்து எந்த வேலையும் முறையாக நடக்கவில்லை.எங்களால் வார்டுக்குள் தலையை காட்டவே முடியவில்லை. அதிகாரிகள் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகின்றனர்,'' வெளிப்படையாக தெரிவித்தார். விளக்க கேட்டு நோட்டீஸ்
கவுன்சிலர் சரஸ் வதிக்கு, கூட்டங்களுக்கு 'ஆப்சென்ட்' ஆனதற்கு விளக்கம் கேட்டு நகராட்சி கமிஷனர் திருமால் செல்வம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது கவுன்சிலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.'பெரும்பான்மையான கவுன்சிலர்களை கொண்ட தி.மு.க., வினர் மத்தியில் கோஷ்டி பூசல் நிலவி வருகிறது. இதனால், எவ்வித வேலைகளும் வார்டுக்குள் நடப்பதில்லை. நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன், 16 வது வார்டு கவுன்சிலர் கமலக்கண்ணன், 23வது வார்டு கவுன்சிலர் முருகானந்தம் என, மூன்று கோஷ்டிகள் உள்ளது. பல விஷயங்களில் நகராட்சி தலைவரின் தன்னிச்சையான செயல்பாடு காரணமாக ஆளும்கட்சி கவுன்சிலர்களே அதிருப்தியில் உள்ளனர்.கடந்த கூட்டத்தில் வெளிநடப்பு செய்து, பேட்டி கொடுத்த கவுன்சிலர் மீது, தற்போது கூட்டத்துக்கு தொடர்ச்சியான 'ஆப்சென்ட்' என காரணம் கூறி திட்டமிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இப்பிரச்னையை தீர்க்க, முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் தலையிட்டு தீர்வு ஏற்படுத்த வேண்டும்,' என்று தி.மு.க., வினரே வெளிப்படையாக கூறுகின்றனர். அ.தி.மு.க.,வுடன்கூட்டணி?
கவுன்சிலர் சரஸ்வதி கூறியதாவது:பாப்பு கண்ணன், அ.தி.மு.க., கவுன்சிலர்களுடன் இணைந்து செயல்படுகிறார். எந்த வேலையும் நடப்பதில்லை. அதிகாரிகளை கண்டித்து அன்று வெளிநடப்பு செய்தோம். உடனே, கூட்டத்துக்கு வரவில்லை. உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்ய கூடாது என்று விளக்கம் கேட்டு கமிஷனர் கடிதம் அனுப்பியுள்ளார்.பெண் கவுன்சிலர்கள் உள்ளிட்ட, பெரும்பாலான தி.மு.க., கவுன்சிலர்கள் எங்களுடன் உள்ளனர். அ.தி.மு.க., கவுன்சிலர்களை வைத்து அன்றைய தினம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அதிகாரிகள் வேலை செய்து கொடுப்பதில்லை என்று குற்றம்சாட்டியதற்கு நோட்டீஸ்.இது அனைத்தும் தனிப்பட்ட நடவடிக்கையாக உள்ளது. எனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் மூலமாக, மற்ற கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தவர்கள் பயப்பட வேண்டும் என்று நோக்கில் செயல்படுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார். பல பணிகள்நடந்துள்ளது
இது குறித்து, பாப்புகண்ணன் கூறியதாவது:ராஜவாய்க்காலில், சாக்கடை கால்வாய் கலந்து விவசாய பூமி பாதிக்கப்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்ற கொண்டு வருகிறோம். அனைவரும் புறக்கணிக்கவில்லை. ஒன்பது பேர் மட்டுமே வெளிநடப்பு செய்தனர்.இதுவரை, ஒவ்வொரு வார்டுக்கும், 50 லட்சம் ரூபாய் பல்வேறு பணிகளுக்காக செலவு செய்துள்ளோம். அதிகாரிகள் விடுப்பு போன்ற காரணங்களால், சிறிய அளவில் வேலை பாதிக்கப்பட்டிருக்கும். அனைவரும் கட்சிக்காரர்கள். இது குடும்ப சண்டை போன்றது. சிலர் தலைவருக்கு ஆசைப்பட்டு வந்திருக்கலாம்.வேலை செய்யவில்லை என கவுன்சிலர்கள் குற்றம் சொல்கின்றனர். நகராட்சியில் பணிகள் நடந்த காரணத்தால் தான், லோக்சபா தேர்தலில், 12 ஆயிரம் ஓட்டு முன்னிலை பெற்றோம்.இவ்வாறு அவர் கூறினார்.ஆலோசிக்கப்படும்...இந்த விவகாரம் குறித்து, தாராபுரம் நகராட்சி கமிஷனர் திருமால்செல்வத்திடம் கேட்டதற்கு, ''கவுன்சிலர் சரஸ்வதி, தொடர்ச்சியாக, நான்கு கூட்டங்களுக்கு வரவில்லை. இதன் காரணமாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். விளக்கம் கொடுத்த பின், கவுன்சிலர்களுடன் ஆலோசனை செய்த பின் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.