உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொதுத்தேர்வில் மீண்டும் நம்பர் 1: மாவட்ட கல்வித்துறை ஆயத்தம்

பொதுத்தேர்வில் மீண்டும் நம்பர் 1: மாவட்ட கல்வித்துறை ஆயத்தம்

திருப்பூர்: 'பள்ளிக்கு வராத மாணவ, மாணவியர் கடைசி நேரத்தில் தேர்வெழுத வரும் போது, தேர்ச்சி சதவீதம் பாதிக்கிறது. அவர்களை பள்ளிக்கு வர செய்வதற்கான முயற்சிகளில், தலைமை ஆசிரியர் தீவிரம் காட்ட வேண்டும்,' என, மாவட்ட கண்காணிப்பு அலுவலரான ஆனந்தி அறிவுறுத்தினார். நவ. 4ம் தேதி, பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட தேர்வுகள் துறை இயக்ககம் ஆயத்தமாகி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் முந்தைய ஆண்டு பொதுத்தேர்வு, நடந்த முடிந்த காலாண்டு தேர்ச்சி சதவீதம், மாணவர்களை தேர்வுகளுக்கு ஆயத்தப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், பள்ளிக்கல்வித் துறையால் நடத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித் துறை, தேர்வுத்துறை இயக்கக அதிகாரிகள், மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) காளிமுத்து தலைமை வகித்தார். ஆன்லைன் வாயிலாக பங்கேற்ற, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணை இயக்குனர் ஆனந்தி பேசியதாவது: அடுத்தடுத்து மாநிலத்தில் முதலிடம் பெற்ற திருப்பூர் கல்வி மாவட்டம், கடந்த முறை மூன்றாமிடம் பெற்றது. மீண்டும் முதலிடம் பெறுவதற்கான முயற்சிகளை இப்போதிருந்தே முன்னெடுக்க வேண்டும். தேர்ச்சி சதவீதம் சரிந்த பள்ளிகள், முந்தைய ஆண்டின் பொதுத்தேர்வு முடிவு களை விட கூடுதலாக தேர்ச்சி சதவீதம் தர வேண்டும்; அதற்காக மாணவ, மாணவியரை தலைமை ஆசிரியர் தயார்படுத்த வேண்டும். பல பள்ளிகளில் சரிவர பள்ளிக்கு வராத மாணவ, மாணவியர் கடைசி நேரத்தில் தேர்வெழுத வரும் போது, தேர்ச்சி சதவீதம் பாதிப்பதாக தெரிய வருகிறது. எனவே, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் முழு வருகைப்பதிவை தலைமை ஆசிரியர் உறுதி செய்வது அவசியம். காலாண்டு தேர்வில், பாடவாரியாக தேர்ச்சி குறைந்த வகுப்பாசிரியர்களை அழைத்து, கூடுதலாக தேர்ச்சி சதவீதம் தர தலைமை ஆசிரியர் அறிவுரைகளை வழங்க வேண்டும். காலாண்டு தேர்வை விட அரையாண்டு தேர்வில் தேர்ச்சி உயர்ந்தால் தான், பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற முடியும். மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் இப்போதிருந்தே பணியாற்றுங்கள். தலைமை ஆசிரியர் ஒத்துழைப்புடன் பணியாற்றி தேர்ச்சி சதவீதம் தர வேண்டும். இவ்வாறு, அவர் அறிவுரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை