| ADDED : ஜூலை 19, 2011 12:09 AM
உடுமலை : கோட்டாட்சியர் தலைமையில் நடத்தப்படும் குறை தீர் முகாமில் வழங்கப்படும் மனுக்களுக்கு தீர்வு கிடைக்காததால் முகாமில் மனு அளிக்க மக்களிடையே ஆர்வம் குறைந்துள்ளது.உடுமலை வருவாய் கோட்டத்திற்குட்பட்ட உடுமலை, மடத்துக்குளம் தாலுகா கிராம மக்களுக்காக கோட்டாட்சியர் தலைமையில் குறை தீர் கூட்டம் வாரம்தோறும் திங்கட்கிழமைகளில் நடத்தப்படுகிறது.உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடக்கும் இந்த முகாமில் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். முகாம் துவங்கிய போது மக்களிடையே கோரிக்கை மனு அளிக்க ஆர்வம் இருந்தது. இதனால், ஜமாபந்தி முடிந்த பின்னரும் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருந்து குறை தீர் முகாமில் மனு அளித்து வந்தனர். முகாமில் அதிகளவு நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பங்களே பெறப்பட்டு வந்தது.இந்த மனுக்களுக்கு குறுகிய காலத்தில் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இதனால், வாரம்தோறும் மனு அளிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
கடந்த வாரம் குறை தீர் முகாமில் 234 மனுக்கள் பெறப்பட்டது. நேற்று கோட்டாட்சியர் ஜெயமணி தலைமையில் நடந்த முகாமில் மனு அளிக்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால், வெறிச்சோடிக்கிடந்த அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் பல மணி நேரம் 'காற்று' வாங்கினர். நேற்று மொத்தம் 45 மனுக்கள் மட்டுமே பெறப்பட்டன. மக்களிடையே ஆர்வம் குறைந்துள்ளதால் முகாமிற்கு வரும் பிற துறை அதிகாரிகளும் வேதனையடைந்துள்ளனர்.மக்கள் கூறுகையில், குறை தீர் முகாமில் அளிக்கப்படும் மனுக்களுக்கு தீர்வு கிடைப்பதில்லை. மேலும், போதிய வசதிகள் செய்யப்படாமல் வெயிலில் காத்திருக்க வேண்டியுள்ளது.
மனு எழுத வருவாய்த்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால், தாலுகா அலுவலகத்தின் வெளியே அமர்ந்திருப்பவர்களிடம் மனுக்கு 20 ரூபாய் வரை கொடுத்து விண்ணப்பம் எழுத வேண்டிய நிலை உள்ளது.மனு எழுத தன்னார்வ தொண்டர்களை ஏற்பாடு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் குறை தீர் முகாமை புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது', என்றனர்.நேற்று நடந்த முகாமில் ஐந்து பேருக்கு சாலை விபத்து நிவாரண தொகையாக தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.